தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. கரோனா நெருக்கடியிலும் இந்த பண்டிகையை கொண்டாட பல மாநிலங்கள் தயாராகி வருக்கின்றன. இந்த நிலையில், பட்டாசு விற்பனைக்கு ராஜஸ்தான் மாநில அரசு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ரகுசர்மாவுக்கு பட்டாசு விற்பனைக்கான தடையை நீக்க வலியுறுத்தி கடிதம் அனுப்பியிருக்கிறார் தமிழக காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர். அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘தீபாவளி என்கிற ஒரு நாள் பண்டிகைக்காக வருடம் முழுக்க சிவகாசி தொழிலாளர்கள் உழைக்கின்றனர்.
ராஜஸ்தானில் சிவகாசி பட்டாசுகள்தான் விற்பனைக்கு வருகின்றன. சிவகாசி மக்களின் வாழ்வாதாரமே இந்த தொழிலை நம்பித்தான் இருக்கிறது. கரோனா நெருக்கடியால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள இம்மக்களின் துயர நிலையை கருத்தில் கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தான் சிவகாசி பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.
ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் சிறிய வர்த்தகர்கள் பலர் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று, முன்கூட்டியே பட்டாசு ஆர்டர்கள் எடுத்துள்ளனர். பட்டாசு விற்பனைக்கு தடை விதிப்பதன் மூலம் வர்த்தகர்கள் பெரிதும் பாதிப்படைவார்கள். அவர்களின் நலன் கருதி தடையை விலக்கிக் கொள்ள வேண்டும்’ என அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார் மானிக்கம் தாகூர்.