கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூபாய் 3 கோடிவரை பண மோசடி செய்ததாக, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அவர் தலைமறைவானார்.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதனிடையே, முன்ஜாமீன் கோரியும், தனது வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரியும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளபோதிலும், அவரை கைது செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, கடந்த 23ஆம் தேதி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்குத் தப்புவதைத் தடுக்க இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் காவல்துறை லுக் அவுட் நோட்டீஸை அனுப்பியது. ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் மனு விவகாரத்தில் தங்கள் தரப்பைக் கேட்காமல் முன்ஜாமீன் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது மேலும் ஒரு பண மோசடி புகார் எழுந்துள்ளது. சாத்தூரில் சத்துணவில் வேலை வாங்கித் தருவதாக 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.