
சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியான அண்டா சீனு என்ற நபரை தனிப்படை போலீசார் கைது செய்து இருந்தனர். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக விசாரணை கைதியாக இருந்த அண்டா சீனுவை போலீசார் அழைத்துச் சென்றனர். அப்பொழுது போலீசாரின் பிடியிலிருந்து அண்டா சீனு தப்பியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தப்பிய அந்த நபரை போலீசார் மீண்டும் தேடி வருகின்றனர். 26 வயதான சீனு என்கிற அண்டா சீனு வி-கேட்டகிரி ரவுடியாக காவல்துறை சரித்திர பதிவேட்டில் இடம் பெற்றுள்ளார். ராயப்பேட்டை காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருந்த நிலையில் தனிப்படை அமைத்து பல நாட்களாக போலீசார் தேடி வந்த நிலையில் இன்று காலை தான் அந்த சீனு தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைதுக்குப் பின்னால் வழக்கம்போல மருத்துவப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக இருந்தது. இந்தநிலையில் போலீசார் பிடியிலிருந்து விசாரணை கைதி கண்ணில் மண்ணை தூவிவிட்டு தப்பி ஓடியது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.