பாமக இளைஞரணி தலைவராக உள்ள மருத்துவர் அன்புமணி ராமதாஸ் திருமணம் செய்துள்ள சௌமியா என்பவர், ஆரணி தொகுதி முன்னாள் எம்.பியும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவராக இருந்தவருமான கிருஷ்ணசாமியின் மகள் தான் சௌமியா. சௌமியாவின் அண்ணன் விஷ்ணுபிரசாத்தும், அன்புமணியும் நெருங்கிய நண்பர்கள். நண்பரின் வீட்டுக்கு செல்லும்போது நண்பரின் தங்கையை பார்த்ததும் காதல் வயப்பட்டார். அந்த காதல் இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணத்தில் முடிந்தது. இதனால் நண்பர்கள் விஷ்ணு பிரசாத்தும் – அன்புமணியும் மாமன் – மச்சான்கள் ஆனார்கள்.
விஷ்ணுபிரசாத் அப்பா வழியில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாநில இளைஞரணி தலைவர், தேசிய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் என கட்சியில் வளர்ந்தார். செய்யார் தொகுதி எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார். அன்புமணி, தனது அப்பா ராமதாஸ் வழியில் பாமகவின் இளைஞரணி செயலாளர் பதிவியல் தன்னை இணைத்துக்கொண்டார். மாநிலங்களவை எம்.பியாக திமுகவால் வெற்றி பெற வைக்கப்பட்டார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
இந்நிலையில் பாமக, பாஜக அணியோடு இணைந்தது. 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது பாமகவை திமுக தங்கள் கூட்டணிக்கு அழைத்தது. அவர்கள் அதிமுக – பாஜக அணியோடு கூட்டணி வைத்தார்கள். இதுப்பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார் காங்கிரஸ் விஷ்ணுபிரசாத். இதற்கு பாமகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் விஷ்ணுபிரசாத் - ஆரணி தொகுதியிலும், அன்புமணி ராமதாஸ் – தருமபுரி தொகுதியிலும் போட்டியிட்டனர். இந்த போட்டி கடுமையாக இருந்தது. ஆரணி தொகுதியில் பாமக சில இடங்களில் பலமாகவுள்ளது. அந்த தொகுதியில், பிரச்சாரத்துக்கு சென்ற விஷ்ணுவை பாமகவினர் பல இடங்களில் மடக்கி, எங்கள் அன்புமணியை எப்படி விமர்சிக்கலாம் என தகராறு செய்தனர்.
இந்நிலையில் வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகளின்போது, தருமபுரியில் போட்டியிட்ட அன்புமணி தோல்வியை சந்தித்துள்ளார். விஷ்ணு ஆரணி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இது பாமகவினரை அதிருப்தியடையவைத்துள்ளது.
மகன் வெற்றி பெற்றாறே என கிருஷ்ணசாமி குடும்பத்தில் பெரியளவில் மகிழச்சியடைய முடியாத அளவுக்கு மருமகன் தோல்வியடைந்து விட்டாரே என கவலைக் கொள்ள வைத்துள்ளது. அன்புமணி மனைவியோ, தனது கணவர் தோல்விக்கு வருந்தும் நேரத்தில், தனது சகோதரர் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்க முடியாமல் சோகத்தில் உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.