தருமபுரி மக்களின் கனவு நனவாகியது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தருமபுரி - மொரப்பூர் இடையே 36 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய தொடர்வண்டிப்பாதை அமைக்க மத்திய தொடர்வண்டித்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து இப்பாதைக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. மொரப்பூர் தொடர்வண்டித் திட்டத்திற்கு ஓப்புதல் அளிக்கப்பட்டிருப்பதன் மூலம் தருமபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கனவு நிறைவேறியிருக்கிறது.
ஒரு மாநிலத்தின் தலைநகரமும், அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களும் தொடர்வண்டிப்பாதை மூலம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது குறைந்தபட்ச கட்டமைப்புத் தேவை ஆகும். தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்த மீதமுள்ள 32 மாவட்டங்களில் 30 மாவட்டங்களின் தலைநகரங்கள் சென்னையுடன் தொடர்வண்டி மூலமாக இணைக்கப்பட்டுள்ளன. தருமபுரி மற்றும் தருமபுரி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தலைநகரமான கிருஷ்ணகிரி ஆகியவற்றுக்கு மட்டும் தான் சென்னையிலிருந்து நேரடித் தொடர்வண்டிப்பாதை அமைக்கப்படவில்லை.
தருமபுரியிலிருந்து மொரப்பூருக்கு 36 கி.மீ நீளத் தொடர்வண்டிப் பாதை அமைக்கப்பட்டால், தருமபுரியை சென்னையுடன் தொடர்வண்டிப் பாதை மூலம் இணைக்க முடியும். ஆகவே, அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய தொடர்வண்டித்துறை இணை அமைச்சர்களாக இருந்த போது, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக, கடந்த 2008-ஆம் ஆண்டிலேயே இந்தப் பாதைக்கு சாத்தியக் கூறு ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. ஆனால், அதன்பின் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை செயல்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால் பணிகள் தொய்வடைந்தன.
2014-ஆம் ஆண்டு தருமபுரி மக்களவைத் தேர்தலில் நான் வெற்றி பெற்ற பிறகு இத்திட்டத்தைச் செயல்படுத்த தொடர்நடவடிக்கைகளை மேற்கொண்டேன். தொடர்வண்டித்துறை அமைச்சர்களாக பதவி வகித்த சதானந்த கவுடா, சுரேஷ் பிரபு ஆகியோரையும், இப்போது தொடர்வண்டி அமைச்சராக உள்ள பியுஷ் கோயலையும், தொடர்வண்டித்துறை அதிகாரிகளையும் 18 முறை சந்தித்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதன்பயனாக தருமபுரி - மொரப்பூர் தொடர்வண்டித் திட்டம் 2016-17 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சில நிபந்தனைகளுடன் சேர்க்கப்பட்டது. அதேநேரத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதால் தொடர்வண்டித்துறைக்கு கிடைக்கும் வருவாய் விகிதம் -5.60% ஆக இருக்கும் என்பதால் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில் சிக்கல்கள் எழுந்தன. இத்திட்டத்தை மத்திய - மாநில கூட்டு முயற்சியில் செயல்படுத்தலாம் என்றும், அதற்கான செலவை தலா 50% என்ற அளவில் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் தமிழக அரசுக்கு தொடர்வண்டி அமைச்சர் கடிதம் எழுதினார்.
ஆனால், அதற்கு தமிழக அரசு ஒப்புக்கொள்ளவில்லை. வழக்கமாக வருவாய் விகிதம் எதிர்மறையாக உள்ள தொடர்வண்டித் திட்டங்களுக்கான செலவை மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளாவிட்டால், அத்தகையத் திட்டங்களை தொடர்வண்டித்துறை செயல்படுத்தாது. எனினும், தொடர்வண்டித்துறை அமைச்சர் பியுஷ் கோயலுக்கு நான் தொடர்ந்து கொடுத்த அழுத்தம் காரணமாக தருமபுரி - மொரப்பூர் தொடர்வண்டித் திட்டத்துக்கு தொடர்வண்டித்துறை அமைச்சகம் ஒப்புதல் கொடுத்துள்ளது. இத்திட்டச் செலவை பகிர்ந்து கொள்ள முடியாது என்று தமிழக அரசு கடந்த திசம்பர் 6-ஆம் தேதி மறுத்துவிட்ட நிலையில், அடுத்த சில நாட்களில் அதாவது 16.01.2019 அன்று இத்திட்டத்திற்கு தொடர்வண்டித்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதை தொடர்வண்டி அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று எனக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். மாநில அரசு நிதி வழங்க மறுத்து விட்ட நிலையில், எனது கோரிக்கையை பரிசீலித்து சாதனை கால அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அடுத்தக்கட்டமாக, இத்திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கும். அடிக்கல் நாட்டு விழாவை விரைவில் நடத்த வேண்டும் என்று மத்திய அரசை நான் வலியுறுத்துவேன். இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் தருமபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கால கனவு நிறைவேறியிருக்கிறது. மொரப்பூருக்கும், தருமபுரிக்கும் இடையே ஆங்கிலேயர் காலத்தில் 1906-ஆம் ஆண்டு முதல் 1941-ஆம் ஆண்டு வரை குறுகியப் பாதையில் தொடர்வண்டிகள் இயக்கப்பட்டன. அதன்பின் இப்போது தான் இந்த வழித்தடத்தில் மின்சார தொடர்வண்டிப்பாதை அமைக்கப்படவுள்ளது.
ரூ.358 கோடியில் 36 கி.மீ தொலைவுக்கு இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்தி முடிக்க முடியும். அதன்பின்னர் தருமபுரி மக்கள் சென்னைக்கு நேரடியாக தொடர்வண்டியில் பயணிக்க முடியும். இதன்மூலம் மக்களவைத் தேர்தலில் நான் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திட்டப் பணிகள் நிறைவேற்றி முடிக்கப்படும் வரை நான் ஓய மாட்டேன். தருமபுரி- மொரப்பூர் தொடர்வண்டிப் பாதை அமைக்கும் விஷயத்தில் தருமபுரி மாவட்ட மக்களுடன் நான் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.