நீர் வரத்து அதிகரிப்பு, கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு நேற்று (அக். 2) ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குதூகலமாக பரிசலில் சென்று காவிரியின் அழகை கண்டுகளித்து வருகின்றனர்.
கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பலத்த மழை பெய்ததை அடுத்து அங்குள்ள கேஆர்எஸ், கபினி ஆகிய அணைகள் நிரம்பின. இதனால் உபரி நீர் முழுவதும் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீர், தமிழகத்தின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றை வந்தடைகிறது. தொடர்ந்து நீர் வரத்து அதிகமாக இருந்ததால் ஒகேனக்கல்லில் ஐந்தருவி பகுதியும் மூழ்கின.
ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றில் பரிசல் சவாரி செய்ய தடை விதிக்கப்படும். இந்தமுறையும் அதுபோல தடை விதிக்கப்பட்டது. சினிபால்ஸ் போன்ற அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது.
தற்போது காவிரியில் நீர் வரத்து குறைந்துள்ள நிலையில், மீண்டும் பரிசல்களை இயக்க அனுமதிக்கக் கோரி பரிசல் ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இப்போது ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதையடுத்து, ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் பரிசல்கள் இயக்க நேற்று அனுமதி அளித்து, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டார். முதல்கட்டமாக ஒகேனக்கல் கோத்திக்கல் பரிசல் துறை முதல் மணல்திட்டு வரை பரிசல் இயக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. பரிசலில் செல்லும்போது சுற்றுலா பயணிகள், பரிசல் ஓட்டிகள் ஆகியோர் கண்டிப்பாக உயிர்காக்கும் கவச உடைகள் அணிந்திருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், பரிசலில் செல்லும்போது அலைபேசிகளில் தற்படம் (செல்ஃபி) எடுப்பதை தவிர்க்குமாறும் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் சவாரி செய்து மகி-ழ்ந்தனர். காந்தி ஜெயந்தி மற்றும் காலாண்டுத் தேர்வு முடிந்து பள்ளிகள் விடுமுறை விடப்பட்டதால், நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் கூட்டமும் கணிசமாக இருந்தது.