
திமுகவின் சாதி ஆதிக்கத்தால் பதவி விலகிய பட்டியலின ஊராட்சி ஒன்றியத் தலைவர்; சமூக நீதி குறித்து பேச திமுகவுக்கு என்ன தகுதி? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராக பணியாற்றி வந்த பட்டியலினத்தைச் சேர்ந்த திமுக உறுப்பினரான பூங்கோதை சசிகுமார், அதே ஒன்றியத்தின் துணைத் தலைவராக பணியாற்றி வரும் திமுக ஒன்றியச் செயலாளர் மாரிவண்ணமுத்து என்பவரால் தமக்கு இழைக்கப்படும் சாதி ரீதியான அடக்குமுறைகளையும், அவமதிப்புகளையும் தாங்கிக் கொள்ள முடியாமல் பதவி விலகியிருக்கிறார். இது அதிர்ச்சியளிக்கிறது.
ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும் பூங்கோதைக்கு முறையான நாற்காலி, மேசை கூட வழங்கப்படவில்லை என்றும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே அவர் பதவி விலகியிருப்பதாகவும் அவரது கணவர் சசிக்குமார் கூறியிருக்கிறார். சாதிய வன்கொடுமைகள் காரணமாக பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் பதவி விலகும் நிலை உருவாகியிருப்பது கண்டிக்கத்தக்கது.

சாதிய அவமதிப்புகளால் பூங்கோதை சசிக்குமார் பதவி விலகுவது இது முதல்முறையல்ல. 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராக பொறுப்பேற்ற அவர், அடுத்த ஆண்டே சாதிய அவமதிப்புகளைத் தாங்க முடியாமல் பதவி விலக முன்வந்தார். கட்சித் தலைமை கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தான் அப்போது அவர் பதவியில் நீடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால், அதன்பிறகும் சாதியக் கொடுமைகள் நீடித்ததால் இப்போது பதவி விலகியிருக்கிறார்.
பூங்கோதைக்கு திமுக ஒன்றியச் செயலாளரால் இழைக்கப்படும் சாதிய அடக்குமுறைகள் மற்றும் அவமதிப்புகள் குறித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோரிடம் முறையீடு செய்யப்பட்டதாகவும், ஆனால், எந்தப் பயனும் இல்லை என்றும் சசிகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். பட்டியலினத்தைச் சேர்ந்த திமுக ஒன்றியப் பெருந்தலைவர் ஒருவருக்கு, அதே கட்சியைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் ஒருவரால் இழைக்கப்படும் சமூக அநீதியை சரி செய்ய முடியாத திமுக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் எவ்வாறு சமூகநீதி வழங்கப் போகிறது?
தமிழ்நாட்டில் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட பெரும்பான்மையான உள்ளாட்சிகளில் பட்டியலினத்தவருக்கு உண்மையான அதிகாரம் வழங்கப்படவில்லை . அவர்களுக்கு அதிகாரம் பெற்றுத் தர திராவிட மாடல் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அண்மையில் கூட, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆனாங்கூர் ஊராட்சியின் தலைவராக இருக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவர் தமக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், சாதி ரீதியாக அவமதிக்கப்படுவதாகவும் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினார். அவருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்றால், நானே அவரை அழைத்துச் சென்று ஊராட்சித் தலைவர் இருக்கையில் அமர வைப்பேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்த பிறகு தான் அவருக்கு இப்போது இருக்கையும், அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இப்படியாக திமுகவால் வழங்க முடியாத சமூகநீதியை பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினருக்கும் பா.ம.க. தான் வழங்கிக் கொண்டிருக்கிறது.
உள்ளாட்சிகளில் சமூகநீதியை நிலைநிறுத்த முடியாத திமுகவுக்கு சமூகநீதி குறித்து பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை. பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.