தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய ஆலையைத் திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசிப்பதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (26/04/2021) காலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக, பாமக, பாஜக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்டக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அப்போது பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகள், “ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டால் தென் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்" என்று கருத்து தெரிவித்தனர்.
பின்னர் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது அரசின் நோக்கம் அல்ல; ஆலையை மூடியதே தமிழக அரசுதான். நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை செயல்பட நான்கு மாதங்களுக்கு மட்டும் அனுமதிக்கலாம். ஆக்சிஜன் உற்பத்தியை, உள்ளூர் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு அமைத்து கண்காணிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை அரசே ஏற்று நடத்தலாம் என ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.