
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்னையில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார். அதற்காக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் அவர் இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த 5 ஆம் தேதி திமுக சார்பில் முழு அமைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி ராணுவ கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்புக் கொடி காட்டும் போராட்டமும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக திமுக சார்பில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
முன்னதாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வன்கொடுமை சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.