தமிழகம் உட்பட பல மாநிலங்கள் "லோக் ஆயுக்தா" அமைப்பை உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அதற்கான கால அவகாசத்தையும் வழங்கியது. இதனால் தமிழக முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவர் தலைமையில் "லோக் ஆயுக்தா" குறித்த ஆய்வு குழு கூட்டம் ஏற்கெனவே நடைப்பெற்றது. இதற்கு பின் இக்குழுவின் நடுவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் பெயர்களை முன்மொழிந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒப்புதல் வழங்கினார்.
இந்நிலையில் தமிழகத்தில் மக்களவை தேர்தல் தொடர்பான விதிமுறைகள் அமலில் உள்ளதால் லோக் ஆயுக்தா தலைவர் நியமனம் குறித்து தமிழக அரசு தமிழக தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியது. இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையர் "லோக் ஆயுக்தா" அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்க ஒப்புதல் அளித்ததால் தமிழக அரசிதழில் அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது.
மாநிலத்தில் ஊழலுக்கு எதிரான "லோக் ஆயுக்தா" அமைப்பு தமிழகத்தில் முதன் முதலாக உருவாக்கப்பட்டது. இது தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க நாளாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. தமிழகத்தில் "லோக் ஆயுக்தா" அமைப்பு உருவாக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் "லோக் ஆயுக்தா" அமைப்பின் முதல் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் கீழ் நீதித்துறை சார்ந்த இருவர் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் திரு. கே. ஜெயபாலன் மற்றும் ஆர். கிருஷ்ண மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் நீதித்துறை சாராத உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐஏஸ்எஸ் அதிகாரி எம்.ராஜாராம் மற்றும் மூத்த வழக்கறிஞர் கே. ஆறுமுகம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் அமைச்சர்கள் ஊழல் தொடர்பான புகார் , அரசு அதிகாரிகள் மீதான புகார்களை இந்த "லோக் ஆயுக்தா" அமைப்பு விசாரணை செய்து உரிய தண்டனையை சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும். மேலும் தற்போது நியமிக்கப்பட்ட லோக் ஆயுக்தா அமைப்பின் பதவி காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். "லோக் ஆயுக்தா" அமைப்பை மக்கள் எவ்வாறு நாடுவது ? என்பது தொடர்பான முழு விவரங்களை தமிழக அரசு தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள் மூலம் விளம்பரங்கள் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பி.சந்தோஷ் , சேலம் .