Omni bus catches fire - passengers luckily escape

சென்னை கோயம்பேட்டில் இருந்து கோவை செல்லும் தனியார் ஆம்னி பஸ் நேற்று இரவு சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை ஓட்டுநர் கார்த்திகேயன் இயக்கிய நிலையில், பயணிகளில் சிலர் ஆங்காங்கே அவர்களுக்கு தேவையான இடங்களில் இறங்கினர்.

Advertisment

இந்நிலையில் சுமார் 15 பயணிகளுடன் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், பஸ் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த போது, பஸ்சின் முன் பகுதி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் கார்த்திகேயன், பஸ்சை உடனடியாக சாலையோரமாக நிறுத்தியதோடு, உள்ளே இருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக வெளியேற்றியுள்ளார்.

Advertisment

ஓட்டுநரின் இந்த துரித நடவடிக்கை காரணமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில், பஸ் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து தகவலறிந்து வந்த சித்தோடு போலீசார், தீயணைப்புத் துறை வீரர்கள் உதவியுடன் பஸ்சில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்ததோடு, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.