சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில், சென்னை புத்தக சங்கமத்தை திறந்து வைத்து பேசினார் இயக்குநர் பாரதிராஜா. அவர் பேசியது: ’’இந்த கருப்புச் சட்டையில் இனம்காக்கும் கருப்பு மனிதர்களே !
இந்த கருத்த மனிதர்களையெல்லாம் காத்து வந்த வெண்தாடி மனிதன் சுவாசித்திருந்த காற்றெல்லாம்,இந்த சுற்றுச்சூழல் இடத்தில் இந்த கருப்பு பாரதிராஜா பேசிக்கொண்டு இருக்கிறேன் என்பது எனக்கே பெருமை யாக இருக்கிறது.
எனக்கு அவ்வளவு கல்வி அறிவு என்பதெல்லாம் இல்லை. எனக்கு என் அம்மா, அப்பன் சொன்ன கதை தெரியும். அக்கா சொன்ன கதை தெரியும். அதை வைத்து பெருமாள் ஆனவன் இந்த ராஜா. ஆரம்ப காலத்தில் கறுப்புச்சட்டை காரர் பற்றி எனக்கு தெரியாது. எனக்கு என தமிழாசிரியர் தான் அதை சொல்லிக் கொடுத்தார். சிறு வயதிலே என் பள்ளியில் மூன்று பார்ப்பனர் ஆசிரியரை எதிர்த்து என் கருப்பு ஆசிரியர் நடிக்க வைத்தும் இயக்கவும் வைத்து வெற்றி பெற வைத்தார். அப்படி உருவானவன்தான் இந்த பாரதிராஜா. ஆனால் அதன் பிறகு தன் படத்திலே பூ நூல் அறுத்து எரிந்தவன்.
தற்போது புத்தக திறப்பு விழாவை திறந்து வைத்து அந்த புத்தகங்களை பார்க்கும்போது எனக்கு ஒன்று தோன்றியது. மீண்டும் இந்த மண்ணில் போராட்டம் செய்ய இன்னும் புத்தகம் வாசிக்க வேண்டும் என்று தோன்றியது.
தொலைக்காட்சி, ஆன்லைனில் வந்த பிறகு கண்களுக்கு காட்சி மட்டுமே கொடுத்து விட்டு மூலைக்கு வேலைதராமல் செய்துவிட்டோம். இந்த பெருமை வாய்ந்த மண்ணில் எங்கிருந்தோ வந்து என் மண்,என் வளம்,என் உரிமை என ஒட்டுமொத்தமாக மறுத்து விட்டு என் நாட்டில் இவ்வளவு பிரச்சனை பற்றி பேசாமல் நாட்டிற்குள் வந்து எருமை மாட்டு மேல் மழை பெய்ந்தார் போல் சென்றுவிட்டாயே நீயெல்லாம் பதவியில் இருந்து என் நாட்டிற்கு என்ன பயன். சரி, அரசியல் பேச வரவில்லை. புத்தகம் என்பது அறிவாயுதம். அதை வாசிப்பதை எப்போதும் நிறுத்தி விடக்கூடாது. இந்த புத்தக விழா சிறப்பாக நடக்க வேண்டும். நன்றி.’’