போதை ஒழிப்பு குறித்து மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, போதை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் "போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு" என்னும் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கே.பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் முன்னிலை வகித்தார். தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திட்டத்தை தொடங்கி வைத்து, போதைக்கு எதிரான உறுதி மொழியை வாசித்தார். அதை மாணவர்கள் பின் தொடர்ந்து சொல்லி உறுதிமொழி ஏற்றனர்.
தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை அழைத்து ஆலோசனை செய்து, தமிழகத்தில் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து பள்ளிகளிலும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி கடலூர் மாவட்டத்தில் 846 பள்ளிகளில் 2,42,458 மாணவ மாணவிகள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுள்ளனர்" என்றார்.
"புகை உயிருக்கு பகை " என்னும் பதாகையை கையில் ஏந்திய அமைச்சர், "இந்தப் பதாகையை கையில் எடுப்பவர்கள் ஒரு போதும் புகையிலை பொருட்களையோ, போதைப் பொருட்களையோ தொடவே கூடாது. புகையிலைக்கு எதிராகவும், போதைப் பொருட்களுக்கு எதிராகவும், மதுவுக்கு எதிராகவும் தலைமை தாங்கி உறுதிமொழி வாசிக்கவும், அறிவுரை கூறவும் எனக்கு முழு தகுதி உள்ளது. ஏனெனில், நான் மது அருந்த மாட்டேன், புகை பிடிக்க மாட்டேன், போதைப் பொருட்கள் பயன்படுத்த மாட்டேன். அதேபோல் இந்த உறுதிமொழி ஏற்கும் நீங்கள் ஒவ்வொருவரும் இந்த பொருட்களை பயன்படுத்தக் கூடாது. யாரேனும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதை நீங்கள் கண்டால், காவல்துறைக்கு தகவல் கொடுங்கள். போதையால் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் மட்டுமல்ல சிறுவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சமூகத்தை போதை இல்லாத ஆரோக்கியமான சமுதாயமாக கட்டமைக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் தொடங்கிய, ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் கீழ் ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதை பயன்படுத்தி நீங்கள் விரும்பும் துறையில் சாதிக்க முன் வர வேண்டும். நான் 28 வயதில் சட்டம் முடித்தேன். மருத்துவராக விரும்பிய நான் போதிய மதிப்பெண்கள் பெறாததால் சட்டப் படிப்பை தேர்ந்தெடுத்தேன். எதற்கும் நான் மனம் தளராததால் அரசியல்வாதியாக, சட்டமன்ற உறுப்பினராக இருப்பதோடு மட்டுமல்லாமல் மருத்துவர்களுக்கெல்லாம் வழிகாட்டும் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளேன். அதனால், தோல்வி ஏற்பட்டால் மனதிற்கு உரமாக்கிட வேண்டும். தற்கொலை முடிவை ஒருபோதும் தேடக்கூடாது" என கூறினார். தொடர்ந்து மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி குழு தலைவர் சிவக்குமார், பேரூராட்சி தலைவர் கோகிலா குமார், உட்பட பலர் பங்கேற்றனர்.