கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துக் கொண்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ப.ரவீந்திரநாத் எம்.பி., வி.ப.ஜெயபிரதீப் உள்பட 18 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வின் ஒரே ஒரு மக்களவை உறுப்பினரான ரவீந்திரநாத் குமார் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால், மக்களவையில் அ.தி.மு.க. பிரதிநிதித்துவத்தை இழந்தது. மேலும், நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. குழுத் தலைவர் பொறுப்பு, அவருக்கு ஒதுக்கப்பட்ட அறை உள்ளிட்டவைத் திரும்பப்பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க.வுக்கு மாநிலங்களவையில் நான்கு எம்.பி.க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.