Skip to main content

ரஜினியுடன் கூட்டு வைத்தால் அவர்களுக்குதான் இழப்பு! செம்மலை எம்எல்ஏ சொல்கிறார்!!

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

அதிமுக கூட்டணயில் இருந்து வெளியேறி பாஜக, ரஜினியுடன் கூட்டணி வைத்தால் பாஜகவுக்குதான் இழப்பே தவிர அதிமுகவுக்கு எந்த இழப்பும் இல்லை என்று மேட்டூர் எம்எல்ஏ செம்மலை கூறியுள்ளார். தனியார் செய்தி சேனல் விவாத நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.

இதுபற்றி அதிமுக அமைப்புச் செயலரும், மேட்டூர் எம்எல்ஏவுமான செம்மலையிடம் நாமும் பேசினோம். அவர் கூறியதாவது,

 

admk semmalai



தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் அனைத்துத் துறைகளிலும் ஒட்டுமொத்த செயல்பாட்டில் தமிழக அரசு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசின் ஆய்வறிக்கை கூறியுள்ளது.

சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. மத்திய, மாநில அரசின் உறவு நன்றாக உள்ளது. மத்தியில் இணக்கமாக இருந்தால்தான், தமிழகத்திற்கு வளர்ச்சித் திட்டங்களைப் பெற முடியும். பாஜகவுக்கு தனிக்கொள்கை இருக்கிறது. அதிமுகவுக்கு தனிக்கொள்கை உள்ளது. இருவரும் கொள்கை அளவில் மாறுபட்டு இருக்கிறோம். ஆனால் பாஜகவுடன் உறவு நீடித்து வருகிறது.

அதேநேரம், பாஜகவில் உள்ளவர்கள் சிலர் ஆளுங்கட்சியை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி ரஜினியுடன் பாஜக கூட்டணி அமைத்தால் அதுபற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. அப்படி நடந்தால் அவர்களுக்குதான் இழப்பு ஏற்படும். இவ்வாறு செம்மலை எம்எல்ஏ கூறினார்.


அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, உள்ளாட்சித் தேர்தலில் 25 சதவீத இடங்களை எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், செம்மலையின் இக்கருத்து, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் எனத்தெரிகிறது.

 


 

சார்ந்த செய்திகள்