அ.தி.மு.க. வழிகாட்டுதல் குழுவுக்கு, பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் அ.தி.மு.க. கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளனர். அதேபோல் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3,300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில், கூட்டணிக்கட்சிகள், தொகுதிகளை முடிவு செய்யவும், சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வெற்றி வியூகம் வகுக்கவும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம், இலங்கை தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமைகளை வழங்க வேண்டும். அதிகாரப் பரவலுக்கு அடித்தளமிட மாகாண கவுன்சில் முறை ரத்து செய்யப்படுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும். இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட மாகாண சபை முறை செய்வதை தடுக்க வலியுறுத்தி தீர்மானம், அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம்,
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றம், தமிழகம் முழுவதும் இரண்டாயிரம் இடங்களில் அம்மா மினி கிளினிக் திறக்க நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டு, நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தில் தமிழகத்தை இணைத்த பிரதமருக்கும், தமிழக அரசுக்கும் பாராட்டு, 7.5% இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி வழங்கி, படிப்பு செலவை ஏற்ற தமிழக அரசுக்கு பாராட்டு உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதைத் தொடர்ந்து, 11 உறுப்பினர்களைக் கொண்ட அ.தி.மு.க. வழிகாட்டுதல் குழுவுக்குப் பொதுக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. 16 தீர்மானங்கள் நிறைவேறிய நிலையில் 16 ஏ என்ற தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், காமராஜ், சண்முகம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், பா.மோகன், கோபாலகிருஷ்ணன், சோழவந்தான் மாணிக்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.