சைவ வேளாளர் மகிமை சங்கத்தின் கூட்டத்தில் பேசப்பட்டது, உளவுத்துறை மூலம் அதிமுக கட்சி தலைமைக்கு செல்ல, நெல்லை மாநகர அதிமுக-வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலிவாழ் சைவ வேளாளர் மகிமை சங்கத்தினை பதிவு செய்ததற்கான நன்றி விழா எனும அடையாளத்துடன் ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 7.10க்கு நெல்லை டவுன் சோனா ஹாலில் சைவ வேளாளர் சமூகத்தின் கூட்டம் தொடங்கியது.
அதிமுக-வினை சேர்ந்த வெங்கடாசலம், கிருஷ்ணமூர்த்தி, பாஜக- மாநில இளைஞரணித் தலைவர் வேல் ஆறுமுகம், காங்கிரஸ் கடலைமணி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் சம்பிரதாயத்திற்காக நன்றி அறிவிப்பு செய்துவிட்டு, "இந்த நெல்லை சட்டமன்றத் தொகுதிக்கான உறுப்பினரை நிர்ணயிப்பதே நம்முடைய சமூகம் தான். மாநகராட்சியினைப் பொறுத்தவரையும் அவ்வாறே.!, மாநகராட்சியின் 55 வார்டுகளில் ஏறக்குறைய 30 வார்டுகளில் நம்முடைய சமூக மக்கள் அதிகம் உள்ளது.
அது போக, 10 வார்டுகள் வரை அங்கு இரண்டாம் இடத்தில் நமது சமூக மக்கள் உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டே மாநகராட்சி உறுப்பினர்களுக்கான வேட்பாளர் பட்டியலில் நம்முடைய சமூக மக்களுக்கு ஆரம்பத்தில் 20 வார்டுகள் வரை வழங்கி வந்தன கட்சிகள். அது தற்பொழுது 5ஆக சுருங்கி விட்டது.
மேயர் வேட்பாளராக நமது சமூகத்தினை சேர்ந்தவர்கள் இருந்தாலும், அவர்களை டம்மியாக்குவது போல் வேறொரு சமூகத்தைச் சேர்ந்தவரை துணைமேயராக்குகின்றனர். இதையெல்லாம் கண்டே, நமக்கு கட்சி முக்கியமல்ல.! சமூகமே முக்கியம் எனக் கருதி திமுக-விற்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆதரவளித்தோம். அவரும் வெற்றிப்பெற்றார்.
இப்பொழுது உள்ளாட்சித் தேர்தல் வருகின்றது. நாம் எதிர்ப்பார்த்தப்படி நம்மை யாரும் கண்டுகொள்ளவில்லை. சட்டமன்றத் தேர்தல் போல் பணியாற்றுவோம். அப்படியில்லையென்றாலும் நமது சமூக வேட்பாளருக்காக பணியாற்றுவோம்." என அனைவரும் குமுறி தீர்த்தது, உளவுத்துறை மூலம் அதிமுக தலைமைக்கு செல்ல, நெல்லை மாநகர அதிமுக-வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.