



தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாநிலம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வரிசையில் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலுக்கு இடையே நடைபெறும் தேர்தல் என்பதால் வாக்குப்பதிவு மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் அரசியல் பிரமுகர்களும் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தன்னுடைய வாக்கை செலுத்தினார். வாக்கு செலுத்த காரில் வந்த நடிகர் விஜய், வாக்குப்பதிவு ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே தன்னுடைய வாக்கை பதிவு செய்துவிட்டுக் கிளம்பினார். நடிகர் விஜய் வருகை தந்தபோது அங்கிருந்த சிலர் விஜய்யுடன் புகைப்படம் எடுக்க முற்பட்டதால் அந்த இடத்தில் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.