கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் நடிகர் கமலஹாசன் நேற்று (12/05/2019) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் இந்த பகுதி முஸ்லீம்கள் நிறைந்த பகுதியாக இருப்பதனால் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பாக இதனை சொல்கிறேன் . சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு 'இந்து' மற்றும் அவர் பெயர் நாதுராம் கோட்செ என தெரிவித்தார். இந்நிலையில் கமலின் இந்த பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இந்தி திரையுலகில் முன்னணி நடிகரான விவேக் ஓப்ராய் கமல்ஹாசன் பேச்சுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது " அன்புள்ள கமல் சார் " நீங்கள் ஒரு சிறந்த கலைஞர்" கலைக்கு எப்படி மதம் கிடையாதோ. அதே போல் தீவிரவாதத்திற்கும் மதம் கிடையாது என்றும் , கோட்சேவை நீங்கள் தீவிரவாதி என்று சொல்லலாம். ஆனால் 'இந்து' மதத்தை ஏன் என் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் ? நீங்கள் வாக்கு சேகரிப்பது முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதி என்பதாலா?
ஒரு பெரிய கலைஞர் ஒரு பெரிய நடிகனின் வேண்டுகோள் இது தயவு செய்து இந்த நாட்டை பிரிக்க வேண்டாம் என்றும் , நாம் அனைவரும் ஒன்று ஜெயஹிந்த் என கூறினார். பிரபல நடிகர் விவேக் ஓப்ராய் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட "பி.எம். நரேந்திர மோடி" திரைப்படத்தில் மோடி வேடத்தில் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் எதிர்ப்பை தொடர்ந்து அரவக்குறிச்சியில் இன்று மேற்கொள்ளவிருந்த பிரச்சாரத்தை நடிகர் கமலஹாசன் ரத்து செய்தார்.