
தூத்துக்குடி மாவட்டம் வெள்ளான்விளை பகுதியில் ஆம்னி காரானது கிணற்றுக்குள் விழுந்து குழந்தை உட்பட ஐந்து பேர் இறந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அதேபோல் நாகர்கோவிலில் சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாகர்கோவிலில் இருந்து தடிக்காரன் கோணம் செல்லும் சாலை அடிக்கடி விபத்துக்கள் நடைபெறும் பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கால்வாயில் தலைக்கு கவிழ்ந்தது. உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த கார் ஓட்டுநர் கிறிஸ்டோபர் காரின் கதவை உடைத்து வெளியே கொண்டு வந்தனர்.

மீட்கப்பட்ட கிறிஸ்டோபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரை ஓட்டிய கிறிஸ்டோபர் மது போதையில் இருந்தாரா அல்லது காரில் ஏற்பட்ட கோளாறால் விபத்து ஏற்பட்டதா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு நாளில் நீர்நிலையில் கார் கவிழ்ந்து விபத்தான இந்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.a