Published on 07/07/2019 | Edited on 07/07/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, வேலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் வீட்டில், அவருக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது. இதனால் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் மட்டும் நிறுத்திவைக்கப்பட்டுயிருந்தது.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 5ந்தேதி வாக்குபதிவு என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி வரும் வாரம் வேட்புமனுதாக்கல் தொடங்கவுள்ளது. முன்பு வேட்பாளராக நிறுத்தப்பட்டவர்களே மீண்டும் வேட்பாளராக்கியுள்ளது அரசியல் கட்சிகள்.
அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி தலைவராக இருந்த ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் கதிர்ஆனந்த்தும் வேட்பாளராக அந்தந்த கட்சிகள் இன்று முறைப்படி அறிவித்துள்ளன. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் களத்தில் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.