Skip to main content

8 நாட்கள் நடைபெற்ற தீவிர தேடுதல்; வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
8 days of intensive search; Vetri Duraisamy's recovery

எட்டு நாட்களாக நடைபெற்ற தேடுதலுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

இமாச்சலப்பிரதேசத்தில் கஷங் நாலா என்ற பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, அவரது நண்பர் கோபிநாத் மற்றும் ஓட்டுநர் டென்சிங் உள்ளிட்ட 3 பேர் கடந்த 4 ஆம் தேதி (04.02.2024) மாலை காரில் பயணம் செய்தனர். அப்போது இவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்தது.

இந்த விபத்தில் சிக்கி காரில் வெற்றி துரைசாமியுடன் பயணித்த திருப்பூரைச் சேர்ந்த அவரது நண்பர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்தில் சிக்கிப் பலியான கார் ஓட்டுநர் டென்சிங் சடலமாக மீட்கப்பட்டார். அதே சமயம் இந்த விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியை கடந்த 8 நாட்களாகத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியை மத்தியப் பிரதேச போலீசார், ராணுவ வீரர்கள், ஸ்கூபா டைவிங் வீரர்கள் மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப்படையினர் என 100க்கும் மேற்பட்டோர்  தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் 8 நாட்களாக நடைபெற்ற தேடுதலுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இமாச்சல் காவல்துறை துணை ஆணையர் அமித் ஷர்மா இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். மீட்கப்பட்ட அவரது உடலானது பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சார்ந்த செய்திகள்