அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஆண் நர்ஸுகளை பணி நிரந்தரம் செய்ய சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகத்துக்கு தலா 4 லட்ச ரூபாய் என 8 கோடி ரூபாய் லஞ்சப் பணம் வசூலிக்கப்பட்டுவருவது ஆடியோ ஆவணங்களுடன் அம்பலமாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
அந்த ஆடியோவில், ‘அனைவருக்கும் வணக்கம். நான் முத்துக்குமார் பேசுறேன். இன்னைக்கு காலையில வந்து சசி ப்ரோ அவர்க்கிட்ட பேசினேன். அவரு, ஜி.ஓ வந்துட்டு ரெடியாகிடுச்சு. ஆனா, நாம டிஸைட் பண்ணினது 160 பேருக்கு மேல. அப்படி, இருந்தா மட்டும்தான் இத செட்டில்மெண்ட் பண்ண முடியும். இருக்கிறது 140 பேர்தான். அதுல, 140 பேர்லேயும் பத்து பதினஞ்சு பேர் ஃபுல் அமண்ட் செட்டில் பண்ணல. சோ… அட்லிஸ்ட் அவங்களாவது ஃபுல் அமவுண்ட் செட்டில் பண்ணினாதான் நம்பளால அங்க அமவுண்டை செட்டில் பண்ணிட்டு வேலையை முடிக்க முடியும். அதுவரைக்கும் ஒண்ணும் பண்ணமுடியாதுன்னு சொல்லிட்டாரு. சோ… இன்னும் கொடுக்காதவங்க தயவு செஞ்சி கொடுங்க. வெளியில இருக்கிறவங்கள கூப்ட்டு ஒண்ணும் வேலைக்கு ஆகுமான்னு தெரியல. அட்லிஸ்ட், 140 பேராவது முழுசா கொடுத்தாத்தான் வேலை முடியும். அப்படி இல்லைன்னா, இன்னும் ஒரு மாசமில்ல, ரெண்டுமாசமானாலும் முடியாது. சீக்கிரம் கொடுக்கப்பாருங்க’ என்று கோரிக்கை வைக்கிறது அந்த ஆடியோ.
ஆண் நர்ஸ் முத்துக்குமார்
இதுகுறித்து, நாம் விசாரித்தபோது… ஆடியோவில் இருப்பவர் ஈரோட்டைச்சேர்ந்த ஆண் நர்ஸ் முத்துக்குமார். இவர், பணி நிரந்தரம் செய்ய வேறு வழியில்லாமல் 4 லட்ச ரூபாய் பணம் கொடுத்தவர்களில் அவரும் ஒருவர். வட்டிக்கெல்லாம் வாங்கி பணம் கொடுத்தபிறகும்கூட, பணிநிரந்தரம் செய்யப்படாததால் சில மாதங்களுக்கு பேசும் ஆடியோதான் இது. லஞ்சப்பணத்தை வசூலிப்பவர்களே சுகாதாரத்துறை அமைச்சரின் நெருக்கமான நர்ஸுகள்தான்” என்று அதிர்ச்சியூட்டுகிறவர்கள் இதுகுறித்து பல்வேறு ஆதாரங்களுடன் விரிவாக பேச ஆரம்பித்தார்கள்.
2015 ஆம் ஆண்டு எம்.ஆர்.பி. (Medical Services Recruitment Board ) எனப்படும் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் மூலம் சுமார் 9,000 முதல் 10,000 நர்ஸுகள் அரசு மருத்துவனைக்கு புதிதாக தொகுப்பூதியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். முதல், 450 ரேங்கிங் எத்தனை ஆண் நர்ஸுகள் வருகிறார்களோ அவர்கள் மட்டும்தான் பணியில் அமர்த்தப்படவேண்டும் என்று அந்த நோட்டிஃபிகேஷனில் இருந்தது.
அதனால், 450 ரேங்கிற்குள் வந்த ஆண் நர்ஸுகளை தேர்ந்தெடுத்துவிட்டு மீதமுள்ள 9,000 பெண் நர்ஸுகளை அப்போது தேர்ந்தெடுத்தார்கள். அதில், 12 ஆண் நர்ஸுகள் உட்பட 2,300 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுவிட்டார்கள். அதற்குப்பிறகு, ஆண் நர்ஸுகளின் பற்றாக்குறை ஏற்பட்டதால் 450 ஆண் நர்ஸுகளை தேர்ந்தெடுக்க மீண்டும் கால்ஃபர் பண்ணினார்கள். சான்றிதழ் சரிபார்ப்புகளுக்குப் பிறகு 297 ஆண் நர்ஸுகளுக்கு தொகுப்பூதியத்தியத்தின் அடிப்படையில் பணிநியமன ஆணை கொடுக்கப்பட்டது. இவர்கள், ஏற்கனவே பணி நிரந்தரம் செய்யப்பட்ட நர்ஸுகளைவிட மதிப்பெண் அடிப்படையில் முன்னணியில் இருப்பார்கள். ஆனால், சீனியாரிட்டி அடிப்படையில் பெண் நர்ஸுகளைவிட பின் தங்கியிருப்பார்கள்.
அதுமட்டுமல்ல, தொகுப்பூதியம் என்றால் 14 ஆயிரத்து 400 ரூபாய்தான் சம்பளம். அதுவே, பணி நிரந்தரம் செய்யப்பட்ட நர்ஸுகளுக்கு 47,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய்வரை சம்பளம் கிடைக்கும். ‘அதிக மதிப்பெண் பெற்றுள்ளோம். ஒரே வேலைதான். ஆனால், தொகுப்பூதியத்தில் இருப்பதால் சுமார் 35,000 ரூபாய் சம்பளம் குறைவாக வாங்க வேண்டிய நிலை இருக்கிறது. அதனால், எங்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும்’ என்றுகூறி அப்போதைய சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்ஸை சந்தித்து யுனைட்டட் எம்.ஆர்.பி நர்சஸ் அசோசியேஷன் மூலம் ஆண் நர்ஸுகள் கோரிக்கை வைத்தார்கள். அப்போது, மதிப்பெண் அடிப்படையில் பட்டியல் மாற்றி அமைக்கப்படும். அதன்மூலம், அதிக மதிப்பெண் பெற்றவர்கள் ஆட்டோமேட்டிக்காக பணிநிரந்தரம் ஆகிவிடுவார்கள் என்று உறுதியளித்தார்.
ஆனால், ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டு சுகாதாரத்துறைக்கு புதிய செயலராக பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்றதுமே ஆண் நர்ஸுகளின் பணி நிரந்தரக்கனவு தகர்ந்துபோனது. அவருக்கு, அதுகுறித்து ஆண் நர்ஸுகள் விளக்கியபோதும் புரியவில்லை என்று சொல்லி அந்த ஃபைலையே கிடப்பில் போட்டுவிட்டார் பீலா ராஜேஷ்.
அதனால், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் யுனைட்டட் எம்.ஆர்.பி நர்சஸ் அசோசியேஷன் செயலாளர் ஐஸ்வர்யா, உறுப்பினர் சசிக்குமார் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில், தலா 4 லட்ச ரூபாய் வீதம் 297 பேரில் (சுமார் 50 ஆண் நர்ஸுகள் வேலையைவிட்டு போயிருப்பார்கள். 40 ஆண் நர்ஸுகள் லஞ்சம் கொடுக்காமல் இருக்கலாம்) சுமார் 200 பேர் தலா 4 லட்ச ரூபாய் என 8 கோடி ரூபாய் வசூலித்து கொடுத்தால் நிரந்தரம் செய்யப்படும் என்று அமைச்சரின் அலுவலகத்தில் டீல் பேசப்பட்டிருக்கிறது.
சசிக்குமாரின் அறிவிப்பு மற்றும் பணம் போடச்சொன்ன வங்கிக்கணக்கு
இதற்கு, ஆதாரமாக 4 லட்ச ரூபாயில் முதலில் 5,000 ரூபாய் டோக்கன் அட்வான்ஸாக, தனது அக்கவுண்டில் (Ac no. 20051736019 IFSC SBIN0011717 நியூ ஆவடி ரோடு பிராஞ்ச்) போடவேண்டும் என்று இதற்கு புரோக்கராக செயல்படும் யுனைட்டட் எம்.ஆர்.பி நர்சஸ் அசோசியேஷன் உறுப்பினர் சசிக்குமார், ‘எம்.ஆர்.பி. மேல் நர்சஸ் சேலஞ்ச்’ என்கிற வாட்ஸ்-அப் குரூப்பில் (அடிக்கடி வாட்ஸ் அப் குரூப்பின் பெயர் மாற்றப்படும்) மெசேஜ் அனுப்பியுளார். இதுவரை, 170 ஆண் நர்ஸுகள் தலா 5,000 ரூபாய் டோக்கன் அட்வான்ஸ் கொடுத்துவிட்டார்கள். அதற்குப் பிறகு, ஃபுல் அமவுண்ட் செட்டில் பண்ணுங்க என்று சசிக்குமார் அனைத்து ஆண் நர்ஸுகளுக்கு ஃபோன் செய்து பேசியிருக்கிறார். 5,000 ரூபாய் டோக்கன் அட்வான்ஸ் கொடுத்த ஆண் நர்ஸுகள் 2020 மே மாதம் மீதமுள்ள 3 லட்சத்து 95,000 ரூபாய் பணத்தை அசோசியேஷன் செயலாளர் ஐஸ்வர்யா மற்றும் சசிக்குமார் கையில் கொடுத்துவிட்டார்கள்.
மேலும், இதற்காக சொத்துப்பத்திரத்திலும் ரகசியமாக கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது (சசிக்குமார் எழுதிய அதற்கான, ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது) அதுவும், அவரவர்களின் சொந்த மாவட்டங்களில் பணிநிரந்தரம் செய்யப்படும் என்று பணம் வசூலித்திருக்கிறார்கள்.
லஞ்சப்பணம் வசூலிக்கும் சொத்துப்பத்திரம்
இந்நிலையில்தான், கரோனா பரவல் கட்டுக்கடங்காததால் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மீண்டும் சுகாதாரத்துறைச் செயலாளராக பதவியேற்கிறார். ஜூலை, ஆகஸ்டில் அனைவரையும் பணிநிரந்தரம் செய்யும்படி லஞ்சப்பணம் வசூலித்த ஆண் நர்ஸுகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது. அனைவரையும் பணிநிரந்தரம் செய்வது விதிக்குப்புறம்பாகிவிடும் என்று சொல்லிவிடுகிறார் ராதாகிருஷ்ணன்.
இதனால், லஞ்சப்பணம் கொடுத்தவர்களின் பணி நிரந்தரம் தாமதம் ஆகிக்கொண்டே இருந்தது. இந்நிலையில்தான், லஞ்சப்பணம் கொடுத்த ஆண் நர்ஸுகள் என்ன ஆயிற்று பணிநிரந்தரம்? என்று கேட்க ஆரம்பித்தபோது, அமைச்சரின் அலுவலகத்தில் லேட் செய்கிறார்கள் என்று பதில் சொல்லியிருக்கிறார்கள் ஐஸ்வர்யாவும் சசிக்குமாரும்.
ஒருகட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சரோ அனைவரையும் பணி நிரந்தரம் செய்யச்சொல்லி உத்தரவிட்டுவிட்டார். அதற்கான, அரசாணையும் போட்டுவிட்டார்கள். ஆனால், அரசாணையை வெளியில் வெளியிடவில்லை.
அமைச்சர் விஜயபாஸ்கருடன் ஐஸ்வர்யா, சசிக்குமார்
அந்த, அரசாணையில் என்ன இருக்கிறது என்பது ஐஸ்வர்யா மற்றும் சசிக்குமாரிடம் உள்ளது. அவர்கள், அந்த அரசாணையின் சாரம்சத்தைக் காண்பித்து மீதிப்பணத்தை வசூலிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனாலும் பணி நிரந்திரந்துக்கான ஆணை கொடுக்கப்படாததால்தான், ஆண் நர்ஸுகள் பணி நிரந்தரத்துக்கு தலா 4 லட்ச ரூபாய் லஞ்சப்பணம் வசூலிப்பது குறித்த தகவல் வெளியில் கசிய ஆரம்பித்துவிட்டது. மேலும், மற்றவர்களும் பணம் கொடுத்தால்தான் தனக்கு பணிநிரந்தர ஆணை கிடைக்கும் என்ற வேதனையில்தான் 4 லட்ச ரூபாய் லஞ்சப்பணம் கொடுத்த ஆண் நர்ஸ் முத்துக்குமார், சீக்கிரம் பணம் கொடுத்துவிடுங்கள் என்று ஏற்கனவே ஆடியோவில் பேசியுள்ளார் என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
மேலும், யுனைட்டட் எம்.ஆர்.பி ஆண் நர்ஸுகள் அசோசியேஷன் செயலாளர் ஐஸ்வர்யாதான் வசூல்வேட்டை நடத்துவதில் நம்பர்-1 இடத்தில் இருக்கிறார். இவர், அமைச்சரின் ஊர்க்காரர். இவரது, அப்பா அதிமுகவில் பொறுப்பாளராக இருக்கிறார். இதையெல்லாம்விட முக்கியப் பின்னணி, இவரது கணவர் செல்வம் என்பவர் சி.எம் செக்யூரிட்டி ஆஃபிஸராக இருக்கிறார். அதனால், உயரதிகாரிகள் யாரும் தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது என்ற தைரியத்தில்தான் இப்படி வசூல்வேட்டை நடத்திக்கொண்டிருக்கிறார் என்று ஷாக் கொடுக்கிறார்கள்.
குற்றச்சாட்டுகள் குறித்து, யுனைட்டட் எம்.ஆர்.பி ஆண் நர்ஸுகள் அசோசியேஷன் உறுப்பினரும் புரோக்கருமாக செயல்பட்டுக்கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்படும் சசிக்குமாரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “தவறான தகவல். அப்படியெல்லாம், வசூலிக்கவில்லை. எங்களுடைய கோரிக்கைகளை கூறத்தான் அமைச்சரை சந்தித்தோம்” என்றவரிடம், உங்களது வங்கிக்கணக்கில் ஒவ்வொருவரும் டோக்கன் அட்வான்ஸாக 5,000 ரூபாய் பணம் செலுத்தியிருக்கிறார்களே? என்று நாம் கேட்டபோது, “அப்படி யாரும் செலுத்தவில்லை” என்று மறுத்தார்.
வாட்ஸ் அப் குரூப்பில் அறிவிக்கப்பட்ட ஆண் நர்ஸுகளின் பட்டியல்
குற்றச்சாட்டுகள் குறித்து, யுனைட்டட் எம்.ஆர்.பி ஆண் நர்ஸுகள் அசோசியேஷன் செயலாளரும் புரோக்கருமாக செயல்பட்டுக்கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்படும் ஐஸ்வர்யாவிடம் விளக்கம் கேட்க பலமுறை தொடர்புகொண்டபோதும் மெசேஜ் அனுப்பியபோதும்கூட அவர் ஃபோனை அட்டெண்ட் செய்யவில்லை. அவர், இதுகுறித்து விளக்கம் அளித்தால் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறது நக்கீரன்.
பணிநிரந்தரம் செய்ய பணத்தை சீக்கிரம் கொடுத்துவிடுங்கள் என்று ஆடியோ வெளியிட்ட முத்துக்குமாரைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது, “நான், அப்படியொரு ஆடியோ வெளியிடவே இல்லை” என்று மறுத்தார்.
ஐஸ்வர்யா, சசிக்குமார், முத்துக்குமார் உள்ளிட்டவர்களை விசாரித்தாலே பணிநிரந்தரத்துக்காக அமைச்சர் தரப்பிற்கு லஞ்சப்பணம் வசூலிக்கப்பட்டது அம்பலமாகும். காசு பணம் இல்லாத ஏழை எளிய மக்கள் நம்பிவரும் அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் வாங்கிக்கொண்டு பணி நிரந்தரம் செய்தால் அந்த நோயாளிகளுக்கு சேவை மனப்பான்மையுடன் சிகிச்சை செய்யவேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்குள் எப்படி வரும்? உயரதிகாரிகளுக்கு பயந்து எப்படி இவர்கள் பணி செய்வார்கள்? லஞ்சமாக கொடுத்ததை எப்படியாவது ஏழை நோயாளிகளிடம் லஞ்சமாக வசூலிக்கத்தானே பார்ப்பார்கள்? அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்குவதால் பாதிக்கப்படுவது என்னவோ அரசு மருத்துவமனைகளை நம்பிச்செல்லும் பொதுமக்களாகிய நாம்தான்!