தமிழகம் முழுவதும் 75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பதிவு செய்து காத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 31- ஆம் தேதி நிலவரப்படி, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன் அடிப்படையில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 17,81,695 பேரும், 19 முதல் 23 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்களைப் பொறுத்த வரையில் 16,14,582 பேரும் வேலை வாய்ப்பிற்காகப் பதிவு செய்துள்ளனர்.
24 முதல் 35 வயது வரை அரசுப்பணி வேண்டிப் பதிவு செய்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 28,60,359 ஆக உள்ளது. மேலும், 36 முதல் 57 வயது வரை வயது முதிர்வுப் பெற்ற பதிவு தாரர்களின் எண்ணிக்கை 13,20,337 ஆக உள்ளது. 58 வயதுக்கு மேற்பட்டவர்கள் 11,386 பேர் பதிவு செய்து வேலைக்காகக் காத்திருக்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரையில் 1,39,825 பேர் வேலை வாய்ப்பிற்காகக் காத்திருக்கின்றனர். மேலும், 3,57,963 பட்டதாரி ஆசிரியர்களும், 2,67,468 முதுநிலை முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் பதிவு செய்து காத்திருப்பதாக, தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பதிவுத்துறை அறிவித்துள்ளது.