சங்கிலி பறிப்பு, வாகனத்திருட்டு, வழிப்பறிக்கொள்ளை என ஒட்டுமொத்த தொடர் கொள்ளைகளுக்கு காரணமான மூன்று இளைஞர்கள் காவல்துறையினரிடம் சிக்கிய நிலையில், நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர் சங்கரன்கோவில் பகுதி மக்கள் என்றாலும், கொள்ளையர்களின் ஒப்புதல் வாக்குமூலம் தான் சுவாரசியமானது என்கின்றனர் காவல்துறையினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஓடை தெரு பகுதியை சேர்ந்த முத்தையா மகன் சதீஷ்குமார். சமீபத்தில் இவரிடம் மூன்று இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டி சதீஷிடம் இருந்து குடிப்பதற்காக ரூ.600 ஐ வழிப்பறி செய்து கொண்டு ஓடியதாக சங்கரன்கோவில் காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. வழக்கினை பதிவு செய்த நிலையில், தொடர் வழிப்பறியை தடுக்கும் எண்ணத்தில் சங்கரன்கோவில் டி.எஸ்.பி.பாலசுந்தரம் உத்தரவின் பேரில் சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டர் சத்யபிரபா மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சோலையப்பன், குட்டி ராஜ் ஏட்டுக்கள் கோபி வீரையா, கோட்டூர் சாமி முனிராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இவர்களின் விசாரணையில், தகவல் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சங்கரன்கோவில் திருவிக தெருவை சேர்ந்த சரவணன், உதய பிரகாஷ் மற்றும் சோலைவேல் ஆகிய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். காவல்துறை விசாரணையில், " எத்தனையோ சம்பவங்கள் செய்துருக்கோம். ஆனால் எதிலும் சிக்கலை. ஆனால், ரூ.600 வழிப்பறியில் சிக்கிட்டோம்." என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவர்கள்,
"10 /7/19 அன்று ஓடைத் தெருவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ராமசாமி கழுத்தில் கிடந்த 5.5 பவுன் சங்கிலியையும், கடந்த 19/7/19 அன்று ஐந்தாம் தெருவில் அதிகாலை வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த பாலசுப்பிரமணியன் மனைவி கழுத்தில் கிடந்த 13.5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றதும் தாங்களே" என்று மேலும் கூற கொள்ளையடிக்கப்பட்ட 19 பவுன் நகை மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய 2 பைக்குகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.