Skip to main content

சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு; முதல்வர் இரங்கல்!

Published on 28/04/2025 | Edited on 28/04/2025

 

7 people lost his life in road incident CM mk stalin condoles

திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி வட்டத்திற்கு உட்பட்டது தளபதி சமுத்திரம் கிராமம். இங்குள்ள கீழூர் வீரநங்கை அம்மன் கோவில் அருகில் திருநெல்வேலி - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று (27.04.2025) மாலை சுமார் 05.00 மணியளவில் நாகர்கோவிலிருந்து திருநெல்வேலிக்குச் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றின் மீது, திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்துகொண்டிருந்த கார் ஒன்று தடம் மாறி எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த பயங்கர விபத்தில் இரு கார்களில் பயணம் செய்த 16 நபர்களில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், டக்கரம்மாள்புரம், விவேகானந்தர் காலனியைச் சேர்ந்த தனிஸ்லாஸ் (வயது 68), மார்கரெட் மேரி (வயது 60), ஜோபர்ட் (வயது 40), அமுதா (வயது 35), குழந்தைகள் ஜோபினா (வயது 8), ஜோகன் (வயது 2) மற்றும் ராதாபுரம் வட்டம் கன்னங்குளத்தைச் சேர்ந்த மேல்கேஸ் (வயது 60) ஆகிய 7 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இவ்விபத்தில் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பாலகிருஷ்ணவேனி (வயது 36), அன்பரசி (வயது 32), பிரியதர்ஷினி (வயது 23), சுபி. சந்தோஷ் (வயது 21), அட்சயாதேவி (வயது 19), பிரவீன் (வயது 10) மற்றும் அஸ்வின் (வயது 8) ஆகிய 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அதோடு நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அதே சமயம் விபத்தில் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்