
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் கண்ணனுக்கு வந்த ஒரு தகவலில், வாணியம்பாடியில் இருந்து ஆந்திரா குப்பத்துக்கு லாரியில் ரேஷன் அரசி கடத்துகிறார்கள் என்கிற ரகசிய தகவலின் அடிப்படையில் வாணியம்பாடி தாலுக்கா காவல்நிலைய போலிஸார் உதவியுடன் அக்டோபர் 25ந்தேதி இரவு தமிழக – ஆந்திரா எல்லையில் உள்ள தேவராஜ்புரத்தில் உள்ள சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தினர். அந்த வாகனத்தில் வந்த ஒருவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறியதால் அவரை பிடித்து வைத்துக்கொண்டனர். அதேபோல் ஆந்திரா பதிவெண் கொண்ட டாடா சுமோ ஒன்று வர அதையும் பிடித்துக்கொண்டனர்.

அப்போது ரேஷன் அரிசி ஏற்றிவந்த ஒரு லாரி சோதனை சாவடியில் நிற்காமல் மிகவேகமாக சென்றது. அந்த லாரியின் பின்னால் வந்த ஆந்திரா பதிவெண் கொண்ட ஒரு காரை தடுத்து நிறுத்தினர். காரில் இருந்த இருவரிடம் விசாரித்தபோது, அவர்கள் ஆந்திரா மாநிலம் பொத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், தமிழகத்தில் ரேஷன் அரிசியை வாங்கிச்சென்று ஆந்திராவில் பாலிஸ் போட்டு விற்பனை செய்யும் கும்பல் என தெரியவந்தது. இருசக்கர வாகனம் ஒன்று, இரண்டு கார்களை பறிமுதல் செய்தனர். 5 பேரை கைது செய்தனர். தப்பி சென்ற லாரிப்பற்றிய தகவல்களை வாங்கி இதுப்பற்றி சித்தூர் மாவட்ட போலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு வாரமும் 50 டன் அரிசியை தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தியுள்ளனர். இவர்களுக்கு வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றாம்பள்ளியில் பெரும் கடத்தல் நெட்ஒர்க் இருப்பதை அறிந்தனர். என்ன காரணம்மோ, போலிஸார் அதுப்பற்றிய தகவல் எதையும் வெளியிடாமல் மறைத்துவிட்டனர், அவர்களுக்கு தமிழகத்தில் உதவி செய்பவர்கள் யாரையும் கைது செய்யவில்லை, விசாரிக்கவுமில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.