
விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் உள்ள கன்னிகாபுரம் விளங்கம்பாடியில் சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கௌதம், திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த யூசுப் ஆகியோர் வியாபாரத்திற்காக வந்திருக்கிறார்கள்.
அவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டியும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியும் அவர்களிடமிருந்து டூவீலர், பணம், செல்ஃபோன் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மயிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த மயிலம் போலீஸார் கொள்ளையர்களைத் தேடிவந்தனர்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், திண்டிவனம் டி.எஸ்.பி கணேசன் தலைமையில் தனிப்படை அமைத்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடுமாறு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தனிப்படை போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செண்டடூர் அருகே, 5 பேர் கொண்ட இளைஞர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் சென்றுள்ளனர்.
அவர்களைச் சுற்றி வளைத்து போலீசார் விசாரணை செய்ததில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியைச் சேர்ந்த 20 வயது ஆனந்த், வீராசாமி, புவனேஷ் குமார் மற்றும் 17 வயதுள்ள இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேர் எனத் தெரியவந்தது.
இவர்கள் ஐந்து பேரும் கன்னிகாபுரம், விளங்கம்பாடி ஆகிய பகுதிகளில் வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்கள் 5 பேரையும் போலீசார் கைதுசெய்து அவர்களிடமிருந்து மூன்று பைக்குகள், ஒரு கத்தி, இரும்பு ராடு ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே கொடுங்கலூர், வந்தவாசி, அனக்காவூர், செங்கல்பட்டு, வெள்ளிமேடு பேட்டை, துரைப்பாக்கம் ஆகிய பல இடங்களில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 5 கொள்ளையர்களும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.