விழுப்புரம் மாவட்டத்தில், பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த ஐந்து நபர்கள், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையின் உத்தரவின்பேரில் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் திண்டிவனம் தாலுகா கேணிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை, அன்பு, நாராயணன், ஆனந்த்மற்றும் தென்பசியார் கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் ஆகிய ஐவரும் மதுவிலக்கு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களை திண்டிவனம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்து ஏற்கனவே சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்களின் தொடர் நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரைக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மேற்கண்ட ஐந்து பேரையும் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் மேற்கண்ட ஐவரும் கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 21 நபர்கள் குண்டர் சட்டத்திலும், 15 நபர்கள் தடுப்புக் காவல் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டுவந்த 2 பேரையும் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறை வைத்துள்ளனர். இப்படி, ஒரே நாளில் 5 நபர்களை தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.