ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழனிபேட்டை விஜயராகவன் தெருவைச் சேர்ந்த தினேஷ் - சர்மிளா தம்பதிக்கு பிறந்து 45 நாட்களே ஆன ஆண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தைக்கு நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தில் கடந்த புதன்கிழமை காச நோய் தடுப்பூசி போடப்பட்டது.
இதனால் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டது. கடந்த 2 நாட்களாக காய்ச்சலில் அவதிப்பட்ட குழந்தை நேற்று திடீரென உயிரிழந்தது. குழந்தையை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்து குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரக்கோணம் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு அங்கு பணியிலிருந்த டாக்டர் விக்னேஷிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் குழந்தை இறந்த ஆத்திரம் தாங்காமல் அங்கிருந்த டேபிள், 2 மின்விசிறி மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள பல் மருத்துவ பரிசோதனை இயந்திரம் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். அங்கிருந்த மருந்து மாத்திரைகளை தரையில் தூக்கி வீசி எறிந்தனர். டாக்டரிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து எல்லோரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். தடுப்பூசி போட்டால் குழந்தைகளுக்கு காய்ச்சல் வருவது வழக்கமான ஒன்று. ஆனால், தடுப்பூசியால் தான் குழந்தை இறந்தது என வதந்தி பரப்பியவர்களின் பேச்சை நம்பியே ஏதோ ஒரு காரணத்தால் குழந்தை இறந்ததற்கு அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கியுள்ளார்கள் பெற்றோரும் அவரது உறவினர்களும்.