
ஈரோடு, அக்ரஹாரத்தில் செயல்பட்டு வரும் துணை கிராம சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் செவிலியர் அகிலா என்பவருக்கு செல்ஃபோனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், பேசிய ஒரு பெண், தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்றும், குழந்தையை வளர்க்க முடியாத நிலையில் உள்ளவர்கள் யாராவது இருந்தால் தெரிவிக்கவும் எனக் கூறியிருக்கிறார்.
மேலும், சட்டப்பிரச்சனை ஏதும் இல்லாத வகையில், வக்கீலுடன் வந்து குழந்தையைப் பெற்றுக் கொள்வதாகவும் கூறி உள்ளார். இதில் சந்தேகமடைந்த செவிலியர் அகிலா, இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். பிறகு கருங்கல்பாளையம் போலீசில் இது சம்பந்தமாகப் புகார் கொடுக்கப்பட்டது. போலீசாரின் ஆலோசனைப்படி, அந்தப் பெண்ணிடம் செல்ஃபோனில் பேசிய செவிலியர் அகிலா, நீங்கள் கேட்பது போன்று ஒரு குழந்தை உள்ளது, வந்தால் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து குழந்தையை வாங்குவதற்காக 3 பெண்கள், 1 ஆண் என நான்கு பேர் வந்தனர். அவர்களைப் பிடித்த கருங்கல்பாளையம் போலீசார், விசாரணை செய்தனர். பிறகு போலீசார் விசாரணையில், பிடிபட்ட அவர்கள் கோவையைச் சேர்ந்த சங்கரேஸ்வரி, சேலத்தைச் சேர்ந்த கோகிலா, மோகனபிரியா மற்றும் பள்ளி பாளையத்தைச் சேர்ந்த நந்தகுமார் எனத் தெரியவந்தது.

போலீசின் தொடர் விசாரணையில், இந்த நான்கு பேருக்கும் ஏற்கனவே குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பவானி லட்சுமி நகரைச் சேர்ந்த சண்முகப்பிரியா என்ற பெண் குழந்தை வேண்டும் என்று கேட்டது உறுதியானது. ஆனால், அந்தப் பெண்ணுக்கும் 15 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பது தெரியவந்ததுள்ளது. தற்போது அந்தப் சண்முகப்பிரியா தலைமறைவாகிவிட்டார். அவர் பிடிபட்டால் மட்டுமே குழந்தை யாருக்காகக் கேட்கப்பட்டது, இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? யார்? இவர்களுக்கும் குழந்தை கடத்தல் கும்பலுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? என்பது உள்ளிட்ட விபரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த நான்குபேரையும் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் சண்முக பிரியாவை தேடி வருகின்றனர்.
இந்தக் குழுவினர் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வாங்கித் தருபவர்களா? அல்லது திருட்டுத்தனமாக குழந்தைகள் விற்பனையில் ஈடுபடுபவர்களா என்பது போலீஸ் விசாரணையில் தெரியவரும்.