சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற ‘கலைஞர் 100 – வினாடி-வினா’ போட்டி பரிசளிப்பு விழா இன்று (23.11.2024) நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்ச் சமுதாயத்தை அடிமைப்படுத்தியவர்களையும், தமிழினத்தின் வளர்ச்சியை எப்படியாவது தடை செய்திட வேண்டும் என்று உள்நோக்கத்துடன் இருந்தவர்களையும் நோக்கி, பகுத்தறிவுப் பார்வையில் சுயமரியாதை உணர்வுடன் வினா எழுப்பியவர்தான் கலைஞர். வினா எழுப்பியதோடு இல்லாமல், அரசியல் களத்தில் மறுமலர்ச்சிக்கான சட்டங்களையும், திட்டங்களையும் உருவாக்கி தமிழ்ச் சமுதாயத்திற்கான விடியலாகவும், முன்னேற்றத்திற்கான விடையாகவும் இருந்தார் கலைஞர். எனவே, கலைஞரின் நூற்றாண்டில் வினாடி-வினா போட்டி நடத்தி, எங்கே திராவிடப் பட்டாளம்? என்று கேட்பவர்களுக்கு, இதோ இங்கே என்று அடையாளம் காட்டியிருக்கிறார் கனிமொழி.
கலைஞர் 100 மட்டுமல்ல இந்தத் தமிழ்நாடும், தமிழினமும், கலைஞர் 1000 கூட கொண்டாடும். ஏன் என்றால், தமிழ்நாட்டில் இருக்கும் பல கோடி மக்களுக்கு லைஃப் கொடுத்ததால்தான், கலைஞர் இன்னும் லைவ் ஆக இருக்கிறார். கலைஞரின் வரிகளில் சொல்ல வேண்டும் என்றால், ஒரு மனிதனின் வாழ்க்கை, அவனுடைய மரணத்தில் இருந்துதான் கணக்கிடப்பட வேண்டும் என்று சொல்வார். அப்படி, நிறைந்த பிறகும், தமிழர் மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்தான் கலைஞர். பேசிப் பேசி வளர்ந்த இயக்கம், இந்த இயக்கம். எழுதி எழுதி வளர்ந்த இயக்கம், இந்த இயக்கம். அப்படிப் பேச்சாளர்களை எழுத்தாளர்களை இளந்தலைமுறையில் இருந்து உருவாக்க வேண்டும்.
புதிய புதிய செய்திகளை, புதிய புதிய கோணத்தில் சொல்ல வேண்டும். சொல் புதிது சுவை புதிது பொருள் புதிது என்ற வகையில் சொல்ல வேண்டும். மிக நீண்ட வரலாற்றுத் தகவல்களைக்கூட மிகச் சுவையாக மக்கள் மனதில் பதியும் வகையில் சொல்ல வேண்டும். நம்முடைய கொள்கை வீரர்களின் பேச்சு நறுக்கென்று இருக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும். ஒருவரின் பேச்சு, மூளையை தொட வேண்டும். அதன் மூலமாக, அவர்கள் மனதை ரீச் செய்ய வேண்டும். அப்படி நீங்கள் அனைவரும் கருத்து சொல்லும் ஸ்டைல்-ஐ உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
போட்டியில் கலந்துகொண்ட நிறையபேர் இங்கு இருக்கிறீர்கள். நான் இப்போது சில கேள்விகளை உங்களிடம் கேட்கப்போகிறேன். முதல் கேள்வி ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்று சொன்னது யார்? ( விடை : தந்தை பெரியார்). இரண்டாவது கேள்வி, பேரறிஞர் அண்ணா அறுவை சிகிச்சைக்கு முந்தைய நாள் டாக்டரிடம், “நான் படிக்கும் புத்தகத்தை, நாளை படித்து முடித்துவிடுவேன், அதன்பிறகு அறுவை சிகிச்சையை வைத்துக் கொள்ளலாம்” என்று சொன்னார். அது என்ன புத்தகம்? (விடை மேரி கரோலி எழுதிய தி மாஸ்டர் கிறிஸ்டியன்). மூன்றாவது கேள்வி, தந்தை பெரியார் ‘எனது பகுத்தறிவு சமூகசீர்திருத்தப் பணியின் முன்னோடி’ என்று யாரைச் சொன்னார்? (விடை : அயோத்திதாசப் பண்டிதர்)” எனப் பேசினார்.