
தே.மு.தி.க மாநில இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் பதவிக்கு வந்த பிறகு நடக்கும் முதல் பொதுக்கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் புளிச்சங்காடு கைகாட்டியில் நடந்தது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விஜய பிரபாகரன் பேசுகையில், ''புதுக்கோட்டைக்கு எனக்கு புதுசு இல்லை பலமுறை அப்பாவுடன் வந்து பின் வரிசையில் அமர்ந்திருப்பேன். இப்ப மேடையில உங்க முன்னாடி நிற்கிறேன். ஏப்ரல் 30 அன்று இளைஞரணி செயலாளர் பதவி கொடுத்தாங்க. அதன் பிறகு முதல்முறையாக புதுக்கோட்டை வந்து பேசிக் கொண்டிருக்கிறேன். 2026 தேர்தலில் கோட்டைக்கு போவோம். நான் 2017ல் மேடை ஏறும் போது பயமில்லை எல்லாம் கேப்டன் கொடுத்த துணிச்சல் தான். அன்று எதுவும் தெரியாமல் சென்று பேசினேன். இன்று நீங்கள் இருக்கீங்க.
அம்மா கூப்டாங்க வந்துட்டேன். கேப்டன் மாதிரி தில்லா போவோம், சாத்தியம் இருக்கும். தலைமை மாறும் போது ஒரு ஷேக் இருக்கும். யாரும் பயப்பட வேண்டாம். எங்களுக்கான காலம் வரும் அதை மக்களான நீங்கள் கொடுக்குறீங்க. சுடச்சுட செல்போனில் வரும் செய்திகளைப் பார்த்து மாறிவிடக் கூடாது சிந்திக்கனும். கட்சிக்காக உழைத்ததால் தான் இந்தப் பதவி எனக்கு. விஜயகாந்த் மகனா நான் ஏன் அரசியலுக்கு வரணும்? நான் நினைச்சிருந்தால் வெளிநாட்ல செட்டிலாகி இருக்கலாம். ஆனால் எங்க அப்பா, அம்மா என்னை அப்படிச் சொல்லி வளர்க்கல.
நிச்சயம் நான் ஜெயிப்பேன். நீங்க ஜெயிக்கணும். எங்கப்பா புதைக்கப்படல இன்றும் பல கோடி மக்கள் இதயத்தில் வாழ்கிறார். கேப்டன் உங்கள் சொத்து எனக்கு நீங்கள் ஆதரவு கொடுக்கனும். "கேட்பது என் உரிமை கொடுப்பது உங்க கடமை" அவதூறு பரப்புவாங்க மக்கள் சிந்திக்கனும். பிரேமலதா இல்லைன்னா கேப்டன் இல்ல. சிங்கம் மாதிரி இருந்த கேப்டன் 4 சுவத்துக்குள்ள 10 வருசமாக இருக்கும் போது எங்கம்மா எப்படி பாத்துக்கிட்டாங்கனு தெரியும். ஜான்சிராணி அவங்க. ஜெவுக்கு நீங்க ஆதரவு கொடுத்ததால ஜெயிச்சாங்க அதேபோல பிரேமலதாவுக்கு நீங்கள் ஆதரவு கொடுக்கனும். எந்த சாதி மதம் இல்லாத கட்சி தேமுதிக. திமுக - அதிமுக ஊழல் கட்சிகள் தான். பசின்னு வந்தா எல்லாருக்கும் சோறு போட்டவர் தான் கேப்டன். அவர் மகன் விஜய பிரபாகரன் உங்கள் முன் நடிகரா வரல. ஆனால் நடிகன் தான் ஆட்சியை புடிக்கனும்னாலும் அதுக்கும் நான் தயாராவே இருக்கேன்.
எந்த கட்சியும் பெரிசு இல்லை. மக்களான நீங்க தான் கடவுள்னு கேப்டன் சொன்னார். ஆனால் திசைதிருப்பிட்டீங்க. என்னையும் திசை திருப்பிடாதீங்க. எந்த கூட்டணியோ அதில் புதுக்கோட்டையில் சீட்டு வாங்குவோம் ஜெயிப்போம். இது வெயில் நேரம் இளநீர், வெள்ளரிக்காய் சாப்பிடுங்க. நிறைய தண்ணீர் குடிங்க. இப்ப எல்லாரும் பத்திரமா போய்டு வாங்க. சிரிச்ச முகத்தோட பேசுறேன். எப்பவும் இதே முகத்தோட இருக்கனும்'' என்று பேசினார்.