Skip to main content

பண்ணாட்டு குளிர்பானங்களுக்கு குட்பை ; கிராம சபாவில் தீர்மானம்; கும்பகோணம் புதூர் மக்கள் சாதனை

Published on 06/10/2018 | Edited on 06/10/2018
petta

 

எஸ். புதூர் ஊராட்சியில் பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களை குடிக்கமாட்டோம், கடைகளில் விற்பனை செய்ய மாட்டோம் என கிராம சபைக்கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானித்து கையொப்பமிட்டிருப்பது பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

 

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து  காரைக்கால் சாலையில்  13 வது கிலோமீட்டரில் இருக்கிறது செங்கரான்குடி புதூர் ஊராட்சி. அதை சுருக்கமாக எஸ்.புதூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.  அந்த ஊராட்சியில்  4,000க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். புதூரைசுற்றி வடமட்டம், கருப்பூர்,காஞ்சிவாய், திருக்குழம்பியம், பேராவூர், நல்லாவூர், பாலையூர், கோனேரிராஜபுரம், சாத்தனூர், உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு புதூர் நகரமே மெயின் பஜாராக இருக்கிறது.    அங்கு தினசரி ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோர் வந்து செல்கின்றனர்.  நூற்றுக்கும் அதிகமான கடைகள், ஹோட்டல்கள் இருக்கின்றனர்.

 

 இந்தநிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு எஸ்.புதூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு பன்னாட்டு குளிர்பானங்களுக்கு ஊராட்சியில் தடை விதிப்பது என முடிவெடுத்து முன்மொழியப்பட்டனர். அந்ததீர்மானத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டனர்.  பன்னாட்டு குளிர்பானங்களால் உடலுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, பன்னாட்டு குளிர்பானங்களால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கடும்பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்"  என்பதை வர்த்தகர்கள் கூறுகின்றனர்.  அவர்கள் மேலும் " சுதேசிபொருள்களின் விற்பனை சரிவால் இந்திய பொருளாதாரம் கடும்பாதிப்பையும் சந்தித்துவருகிறது. உள்நாட்டு சிறு, குறு உற்பத்தியாளர்கள் பலர் உற்பத்தியை கைவிட்டுவவருகின்றனர்.

 

இந்த நிலமையில் பன்னாட்டு குளிர்பானங்களுக்கு ஒரு ஊராட்சியே தடைவிதித்திருப்பது அனைத்து தரப்பினரிடமும் பாராட்டைப்பெற்றுள்ளது.

ஏற்கெனவே அந்த ஊராட்சிக்கு உட்பட்ட கடைகளில்  2017 மார்ச் 31ஆம் தேதி முதல் பன்னாட்டு குளிர்பானங்களான பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்களின் விற்பனைக்கு தடை விதித்து, அதனை திறம்பட நடைமுறைப்படுத்தி வருகின்றனர் வணிகர்கள். தற்போது ஊராட்சியே தடை செய்யப்பட்டிருப்பது பெரும் பாராட்டைப்பெற்றுள்ளது.

 

இதுகுறித்து எஸ்.புதூர் வணிகர் சங்க நிர்வாகி தீன.செல்வம் கூறுகையில், " பன்னாட்டு குளிர்பானங்களால் உடல் நல பாதிப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டும், பன்னாட்டு நிறுவனங்களால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள், வணிகர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருவதை அறிந்து கடந்த ஓராண்டாக பன்னாட்டு குளிர்பானங்களை விற்காமல், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் குளிர்பானங்களை மட்டுமே விற்று வருகிறோம். இதற்காக சென்னையில் நடைபெற்ற வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டில் விருதும் பெற்றுள்ளோம்.


நாட்டிற்கே முன்னுதாரணமாக பன்னாட்டு குளிர்பானங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள தடையை இந்த ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் மட்டுமல்லாது, இவ்வழியே காரைக்கால், திருநள்ளாறு செல்லும் சுற்றுலாப் பயணிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியிலும் சுதேசி பொருள்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம். இதற்கு ஊக்கமளிக்கும் வகையில் தற்போது ஊராட்சி சார்பில் பன்னாட்டு குளிர்பானங்களுக்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது". என்றார்.   

 

தீர்மானம் குறித்து கும்பகோணம் வணிகர் சங்கங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் வி.சத்தியநாராயணன்  கூறுகையில், "உள்நாட்டு வணிகர்கள், உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் எஸ்.புதூர் வணிகர்களுக்கு, மேற்கண்ட தடை சிறந்த அங்கீகாரமாக விளங்கும். இதன் மூலம் இந்தியச் சந்தையில் இந்திய பொருள்களை மட்டுமே விற்கும் நிலையை அடைவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது". என்றார்.

 

வழக்கறிஞர் சிவச்சந்திரன் கூறுகையில், "ஜல்லிகட்டு போராட்டத்தின் போது மாணவர்களும், பொதுமக்களும் அயல்நாட்டு குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினோம். இதனை நிறைவேற்றும் வகையில் பொதுமக்களே ஒன்றிணைந்து பன்னாட்டு குளிர்பானங்களுக்கு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது ". என்றார் அவர்.

 


 

சார்ந்த செய்திகள்