Skip to main content

கத்தி முனையில் பணம் பறிப்பு; 3 பேர் கைது

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

3 arrested for extorting money from auto owner at knife point

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் ஆட்டோ உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

 

திருச்சி கீழ சிந்தாமணி புதுவை நகரை சேர்ந்தவர் முருகேசன் மகன் 23 வயதான நவீன் குமார். இவர் சொந்தமாக பயணிகள் ஆட்டோ வைத்து சத்திரம் பேருந்து நிலைய ஆட்டோ ஸ்டேண்டில் ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று சத்திரம் பேருந்து நிலையத்தில் லால்குடி அருகே வாளாடி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த 25 வயதான திலீப்குமார், ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த 23 வயதான ராமச்சந்திரன் என்கின்ற விக்கி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதான ஹரிஹரன் ஆகிய மூன்று பேரும் நவீன்குமாரிடம் சமயபுரம் செல்ல வேண்டும் என கேட்டுள்ளனர். 

 

அப்போது ஆட்டோ ஸ்டேண்டில் இருந்த மற்ற ஓட்டுநர்கள் நவீன்குமாருக்கு துணையாக மற்றொரு நபரை அனுப்பி வைத்துள்ளனர். அனைவரும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சமயபுரத்துக்கு பயணம் செய்துள்ளனர். அப்போது சமயபுரம் கோயில் வளாகத்தில் இறங்கிய போது ஆட்டோ உரிமையாளர் நவீன் குமாரிடம் கத்தியை காட்டி அவரிடமிருந்த பணம் ரூ. 750ஐ பறித்துள்ளனர். அப்போது நவீன் குமார் மற்றும் துணைக்கு வந்த நபர் இருவரும் சேர்ந்து மூவரையும் பிடித்துள்ளனர். இதில் இருவர் தப்பிச் சென்ற நிலையில் ஒருவர் மட்டும் பிடிபட்டுள்ளார். அவரை அழைத்துக் கொண்டு சமயபுரம் காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை, நவீன்குமார் போலீசாரிடம் கூறினார். 

 

இதனையடுத்து, போலீசார் சமயபுரம் கோயில் வளாகத்தில் தப்பியோடிய குற்றவாளிகளை தேடிய போது மற்றொருவர் சிக்கினார். தப்பிச்சென்ற மூன்றாவது நபர் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவரை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில், ஆட்டோ உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டிய நபர் என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சமயபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த போலீசார் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்