தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையின் வளர்ச்சிக்கு தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் (07-01-24) மற்றும் நாளையும் (08-01-24) நடைபெறுகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வரவேற்புரை ஆற்றினார். இந்த விழாவில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கலந்துகொண்டுள்ளார்.
இந்த மாநாட்டில் பல்வேறு தொழில் முதலீடுகள் ஒப்பந்தமாகி வரும் நிலையில் சேலத்தில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து 2,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனியார் நிறுவனம் 'ஏரோஸ்பேஸ் ஹப்' மையம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. சேலத்தில் அமைய இருக்கும் ஏரோஸ்பேஸ் ஹப் மூலம் வரும் ஐந்து ஆண்டுகளில் சுமார் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏரோஸ்பேஸ் ஹப் மூலம் சிறுகுறு தொழிலாளர்களுக்கும் அதிக அளவு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என உலகம் முதலீட்டாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.