Skip to main content

2000 ரூபாய் நோட்டா...? எச்சரிக்கை அது கள்ள நோட்டாக இருக்க கூடும்.. -  வியாபாரிகள் கலக்கம் 

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

2000 rupee note ...? Warning It may be a counterfeit note .. - Merchants upset

 

ஒரே நாள் இரவில் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்து, புதிய 500 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டுக்களை இந்திய மக்களுக்கு அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி.


ஆனால், தற்போது அந்த 2,000 ரூபாய் நோட்டு பெரும்பாலும் புழக்கத்தில் இல்லை. இந்நிலையில் அரசு அச்சடித்து வெளியிட்டுள்ள அதே 2,000 ரூபாய் நோட்டு போல ஏராளமான கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன.

 

ஈரோடு மாவட்டம், கொங்கலம்மன் கோவில் வீதியில் 200க்கும் மேற்பட்ட மொத்த மளிகை கடைகள், மிட்டாய் கடைகள், எண்ணெய் கடைகள் உள்ளன. அங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் சிறு வியாபாரிகள் மொத்த விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த கடை வீதி கடைகளில் போலி ரூபாய் நோட்டு கொடுத்து மோசடிகள் நடந்துவருகின்றன. இது வியாபாரிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் அருகே ஒரு மொத்த வியாபார மிட்டாய் கடை உள்ளது. அங்கு நகரின் பல பகுதியில் இருந்து வியாபாரிகள் மொத்தமாக மிட்டாய் வாங்கி செல்வது வழக்கம். 17ந் தேதி மாலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க வந்த பெண் ஒருவர், 2,000 ரூபாய் நோட்டை கொடுத்து மிட்டாய் வாங்கியுள்ளார். அதேபோல வேறொரு பெண் அதே மிட்டாய் கேட்டு இரண்டாம் ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர், பணத்தை பரிசோதனை செய்ததில் பெண் கொடுத்த ரூபாய் நோட்டு போலி கள்ள நோட்டு என்பதை கண்டறிந்துள்ளார்.


அப்போது முதலில் பணம் கொடுத்த பெண், மிட்டாய் வேண்டாம் என கூறி பணத்தை கேட்டுள்ளார். ஆனால் கடை உரிமையாளர்  இருவரிடமும் இருந்த மிட்டாய்களை பெற்றுக்கொண்டு பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளார். இதேபோல மார்கெட்டில் சில கடைகளில் போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து குறைந்த விலைக்கு பொருட்களை வாங்குவதும் மீதம் ரூபாயைப் பெற்று மோசடி செய்யும் செயல்களும் நடந்துள்ளன.


போலி ரூபாய் நோட்டுகளை கடை வியாபாரிகள் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக முதலில் ஒரு பெண் வந்து போலி ரூபாய் நோட்டுகளை கொடுப்பார். பின்னர் சிறிது நேரம் கழித்து மற்றொரு பெண் வந்து உண்மையான ரூபாய் நோட்டுக்களை கொடுத்து கடைக்காரர்களிடம் பொருள் வாங்குவது போல் வாங்கி பின்னர் பொருள்கள் வேண்டாம் என்று கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவார். இதனால் கடைக்காரர் அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தி அவரிடம் பணத்தை கொடுத்து விடுவார். இந்த சமயத்தை பயன்படுத்தி போலி ரூபாய் நோட்டுக்களை கொடுத்த பெண் சிறிதளவு பொருட்களை வாங்கி கொண்டு நல்ல ரூபாய் நோட்டுக்களை கடைக்காரரிடம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபடுகின்றனர்.

 

மூன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தனித்தனியாக வந்து இந்த மோசடி செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடை வியாபாரிகள் தங்களது வாட்ஸ்-அப் குரூப்பில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கடைகளுக்கு 2000 ரூபாய்  நோட்டுகளை யாராவது கொண்டு வந்தால் அதனை சரி பார்த்து வாங்கிக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் மோசடி கும்பலை  பிடிக்க போலீசார்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்