ஒரு ரோடு போட ரூ.1 கோடி நிதி ஒதுக்கி அமைச்சர் பூமி பூஜை போட்ட பிறகு அதே ரோட்டில் ரூ.5 லட்சத்திற்கு சிமென்ட் சாலைப் பணிக்கு நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கியுள்ள அவலம் நடந்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீரமங்கலம் - பட்டுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் இருந்து கீரமங்கலம், செரியலூர் இனாம், செரியலூர் ஜெமின், வேம்பங்குடி மேற்கு ஊராட்சி வரை சென்று கீரமங்கலம் - பேராவூரணி சாலையில் இணையும் சுமார் 3 கி.மீ இணைப்பு கிராமச் சாலை உள்ளது. இந்தச் சாலையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மேம்பாட்டுச் சாலை (ஆர்.ஆர்) திட்டத்தில் இணைத்து நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.1 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனை அழைத்து வந்து சாலைப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடத்தினர். மழைக்காலம் என்பதால் சாலைப் பணி தாமதம் செய்யப்பட்டிருந்தது. இன்னும் சில நாட்களில் பணிகள் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் தான் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள வேம்பங்குடி கிழக்கு ஊராட்சியில் பேராவூரணி சாலையில் (ஆர்.ஆர்.க்கு ஒப்படைக்கப்பட்ட சாலை) இருந்து சுமார் 200 மீட்டர் நீலத்திற்கு சிமெண்ட் சாலை அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சாலையில் தான் ஆர்.ஆர். சாலையும் வரப்போகிறது. அதாவது தற்போது அவசர கதியில் போடப்படும் சிமெண்ட் சாலையில் இன்னும் சில நாளில் ஆர்.ஆர். சாலைப் பணிக்காக உடைத்துவிட்டு தார்ச்சாலை போடப் போகிறார்கள். இதனால் மக்கள் வரிப்பணம் ரூ.5 லட்சம் வீணாகப் போகிறது.
ஒரு சாலை நெடுஞ்சாலைக்கு ஒப்படைத்து அந்த சாலை பணிக்காக ஒப்பந்தம் விடப்பட்ட பிறகு ஊராட்சி ஒன்றியம் எப்படி சிமெண்ட் சாலைக்கு நிதி ஒதுக்கி டெண்டர் விட்டது? இப்போது போடப்படும் சிமென்ட் சாலையை தார்ச்சாலை போட வருபவர்கள் உடைத்துவிடுவார்களே என்று அறந்தாங்கி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டால், வேம்பங்குடி கிழக்கு ஊராட்சியில் யூனியனில் இருந்து எந்த வேலையும் நடக்கலயே என்று சொன்ன ஒன்றிய அதிகாரிகள் சிறிது நேரத்திற்கு பிறகு அது அண்ணா மறுமலர்ச்சித் திட்டப் பணியாம் என்றனர். எந்தப் பணியானாலும் அதே சாலைக்கு மற்றொரு டெண்டர் விடப்பட்ட பிறகு அதில் சிமெண்ட் ரோடு வேலை செய்தால் அந்தப் பணம் வீணாகாதா? என்ற நமது கேள்விக்கு ஒன்றிய அதிகாரிகளிடம் இருந்து பதில் இல்லை.
தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஆர்.ஆர் திட்டப் பொறியாளர் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, எங்களிடம் ஒப்படைத்த சாலையில் வேறு யாரும் பணி செய்யக் கூடாது. ஒன்றிய நிதியில் வேலை நடப்பது பற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட திட்ட அலுவலர் கவனத்திற்கு கடிதம் அனுப்பிவிட்டோம். இனிமேல் அவர்கள் வேலை செய்யமாட்டார்கள். எங்கள் டெண்டர் படி முழுமையாகத் தான் தார்ச்சாலை போடுவோம் என்றார். ஆனால் இன்று வரை தற்காலிக சிமென்ட் சாலைக்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது, ரொம்ப வருசமா குண்டும் குழியுமா கிடந்த ரோட்டுக்கு இப்ப ஆர்.ஆர்.ல நிதி ஒதுக்கின பிறகு பஞ்சாயத்தில் இருந்து சிமென்ட் ரோடு போடுறாங்க. இவங்க போட்ட ரோட்டை நெடுஞ்சாலைத்துறையினர் இன்னும் சில நாளில் உடைச்சுட்டு தார் ரோடு போடப் போறாங்க. கேட்டா மரம் நிக்கிது தார் ரோடு உடைஞ்சிடும்ன்னு சொல்றாங்க. ஆனா ஆர்.ஆர். ரோட்டுக்காரங்க எங்களுக்கு ஒதுக்குன அளவு ரோடு போடுவோம்னு சொல்றாங்க. இதனால ஒரு ரோடு போட்டு பில் எடுத்ததும் ஒரு வாரத்தில் உடைக்கப் போறாங்க. மக்கள் வரிப்பணத்தை இந்த அதிகாரிகள் எப்படி வீணடிக்கிறாங்கன்னு பாருங்க. சிமென்ட் ரோட்டை வேறு ஒரு தெருவில் கூட போடலாம் என்கின்றனர்.
இதே போல தான் கறம்பக்குடி ஒன்றியத்தில் கருக்காகுறிச்சி தெற்கு தெருவில் ஒரு தனி நபரின் பட்டா இடத்தில் சுமார் 50 மீ பேவர் பிளாக் ரோடு போட வந்த போது நிலஉரிமையாளர் தடுத்து யாருக்குமே பயன்படாமல் என் நிலத்தில் போட வேண்டாம் என்று சொன்ன போது இன்று ரோடு போடுறோம் ஒரு வாரத்தில் பில் எடுத்ததும் நீங்க ரோட்டை உடைச்சுட்டு விவசாயம் பண்ணுங்கனு சொல்லி இருக்கிறார்கள். அதாவது அரசு பணத்தை பில் போட்டு எடுக்கத்தான் டெண்டர்கள் கொடுக்கிறார்களா அதிகாரிகள்? என்ற கேள்வி சில சம்பவங்களில் இருந்து எழுந்துள்ளது.