திருநெல்வேலி டவுன் நல்லமுத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் மகாராஜன். 32 வயதன இவர் உடன்குடி அனல்மின் நிலையத்தில் காண்டிரக்ட் அடிப்படையில் எலக்டரீசியனாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி காலை பணியை முடித்த மகாராஜன் தனது இருசக்கர வண்டியில் திருச்செந்தூர் நோக்கிச் சென்றார். இவருக்கு எதிர்திசையில், திருச்செந்தூர் நடுநாலுமூலைகிணறு காந்தி தெருவைச் சேர்ந்த சேகர் என்பவரின் 28 வயதான மகன் வனராஜ், தனது நண்பரான நாகர்கோவிலைச் சேர்ந்த காதருடன் இருசக்கர வாகனத்தில் வந்தார். யாரும் எதிர்பாராத விதமாக கல்லாமொழி மெயின்ரோட்டில் சென்றபோது, அதிவேக பயணத்தில் திடீரென இரண்டு இருசக்கர வாகனங்களும், நேருக்கு நேர் மோதிக் கொண்டன. நொடிப் பொழுதில் நேர்ந்த இந்த கோர விபத்தில், இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மூவரும் பலத்த காயமடைந்தனர். உடனே, அவர்களை அவ்வழியாகச் சென்றவர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், அங்கு மகாராஜன், வனராஜ் ஆகிய இருவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மறுபுறம், உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த காதருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே, தகவலின் பேரில் விபத்து நடந்த பகுதிக்குச் சென்ற இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான திருச்செந்தூர் தாலுகா போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் பலியான மகாராஜனுக்கு திருமணமாகி நான்கு மாதங்களான நிலையில், இப்படி ஒரு துயர சம்பவம் நடைபெற்றது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து மருத்துவனைக்கு வந்த இறந்தவர்களின் குடும்பத்தினர், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களைப் பார்த்துக் கதறி அழுதது, காண்போரை கண்கலங்க செய்தது. தொடர்ந்து, விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்து நடந்தபோது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இந்த சிசிடிசி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்செந்தூர் அருகே கல்லாமொழி சாலையில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதி கொண்ட விபத்தில் 2 போ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.