அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட மாமன்னன் இராசேந்திர சோழனின் கட்டுப்பாட்டில் இருந்த வரலாற்றுப் புகழ் பெற்ற டி.பழூர். அருகே உள்ள கோவிந்தபுத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவி இந்திரா கதிரேசனைத் தொடர்ந்து, அதே டி.பழூர் அருகே உள்ள மற்றுமொரு பஞ்சாயத்து தலைவர் தங்க ரவிச்சந்திரனும் தனது அதிரடியை துவங்கியுள்ளார்.
இதுகுறித்து சாத்தாம்பாடி ஊராட்சி தலைவர் தங்க ரவிச்சந்திரன் கூறுகையில், தனது ஊராட்சிக்குட்பட்ட 5000 மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பெண்களின் தாலியை காப்பாற்றும் நோக்கிலும், பெண்களின் கோரிக்கைகளை ஏற்றும், இளைஞர்கள் சிறு வயதிலேயே குடித்துவிட்டு தங்கள் உடல்நலத்தை கெடுத்துக் கொள்வது தொடர்கதையாகி இளைஞர்கள் வாழ்க்கை கெட்டு விடும் என கருதியும் தங்களது ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் மதுபானமே இல்லை என்ற சூழலை உருவாக்க வேண்டும் என முடிவெடுத்தோம்.
அதன்படி விக்கிரமங்கலம் காவல்நிலைய ஆய்வாளர் சரத்குமாரிடம் ஊராட்சியை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் ஒன்று சேர்ந்து மதுபானமே இல்லாத சூழலை எங்கள் ஊராட்சியில் ஏற்படுத்த வேண்டும் எனவும், அதற்கு காவல்துறை முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கூறி கோரிக்கை மனுவை அளித்தனர். அதற்கு உடனடியாக களத்தில் இறங்கிய காவல் ஆய்வாளர் சரத்குமார், கள்ளத்தனமாக அரசு மதுபானங்களை விற்றவர்களிடம், மதுபானம் விற்க மாட்டோம் என கையெழுத்து வாங்கி ஆவணப்படுத்தியதோடு, இனியும் மீறி கள்ளத்தனமாக மதுபானம் விற்பதாக தகவல் கிடைத்தால் குண்டர் சட்டம் பாயும் என எச்சரிக்கை விடுத்தார்.
எனவே காவல்துறையின் நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் கள்ளத்தனமாக மது விற்பவர்கள், தங்களது தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்திய பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளையும் வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசிய கள்ள மதுபான விற்பனையாளர் கோவிந்தராஜ் மிரட்டும் தொனியில் “என் பொழப்பில் மண் அள்ளி போட்ட உன்னை சும்மா விட மாட்டேன்'' என அதிரடித்துள்ளார். மேலும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் படி, சாத்தாம்பாடி ஊராட்சியின் கடந்த 6 மாத கால வரவு செலவு கணக்குகளை கேட்டுள்ளார்.
இதனை கேள்வியுற்று சாத்தாம்பாடி ஊராட்சி தலைவர் தங்க ரவிச்சந்திரனிடம் கேட்டபோது அவர் கூறுகையில், “நேர்மையாக மக்கள் பணிபுரியவே சாத்தாம்பாடி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். எனவே நேர்மையை முதலீடாக வைத்துக் கொண்டு சிறந்த நிர்வாகத்தை தரவே ஊராட்சி தலைவர் பதவியை பயன்படுத்துவேன்” என செய்தியாளர்களிடம் கூறினார்.
“இவ்வளவு பிரச்சனைகளையும் சந்தித்த தலைவர்கள் உடும்பு பிடியாக உறுதியாக உள்ளதை நனைக்கும்போது, மக்கள் நலன் விரும்பும் அனைவரையும் ஒரு கணம் புல்லரிக்கச் செய்வதோடு மெய்சிலிர்க்க வைக்கின்றது. எனவே நாட்டில் நல்ல மழை பெய்கிறது என்றால் இது போன்று ஒரு சில நல்ல மனிதர்களால் தான் என கள ஆய்வு செய்ததில் தெரிகிறது” என்று சமூக ஆர்வலர்கள் பாராட்டுகின்றனர். கோவிந்தபுத்தூர் சாத்தாம்பாடி ஊராட்சியைத் தொடர்ந்து பல ஊராட்சி மன்றத் தலைவர்களும் கள்ளத்தனமாக மதுபானம் விற்பதை தங்களது ஊராட்சிகளில் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கிராம மக்களின் நலன் கருதி செயல்படும் பொறுப்புமிக்க தலைவர்களின் செயல்பாடுகளை கண்ணுற்று சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிகிறது. இதேபோல அனைத்து ஊராட்சி தலைவர்களும் மதுவுக்கு எதிராக குரல் கொடுத்தால் மதுவை ஒழித்து விடலாம், பல பெண்களின் தாலியை காப்பாற்றலாம் என மதுவுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஊராட்சி மன்றத் தலைவர்களின் குரலாகவே உள்ளது.