கடலூர் மாவட்டம் தொழுதூர் நான்கு முனை சந்திப்பில் விழப்புரம் கோட்ட மத்திய (கலால்) புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ், உதவி ஆய்வாளர் அழகிரி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக ஈச்சர் லாரி ஒன்று வர அதை மடக்கி சோதனையிட்டனர்.
புதுச்சேரியில் இருந்து மதுரைக்கு சென்ற அந்த லாரியின் மேல், நடு, பின் பகுதிகளில் 100 நெல் தவுட்டு மூட்டைகளை அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றின் உள் பகுதிகளை சோதனையிட்டதில் நூற்றுக்கணக்கான மது பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவைகளில் 10,000 மதுபாட்டில்கள் கடத்தியது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் லாரி ஓட்டுனர் வில்லியனூரை சேர்ந்த அய்யப்பன், மது கடத்தும் பொறுப்பாளர் வானூரை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
பின்னர் லாரியுடன் விருத்தாசலம் காலால்துறையிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ 15 லட்சம் ஆகும்.
விசாரணையில் புதுச்சேரியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மது உற்பத்தி ஆலையிலிருந்து கடத்தப்பட்டது என்பதும், ஏற்கனவே மது கடத்தல் வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகளான புதுச்சேரியை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் தாஸ் ஆகியோருக்கும் இந்த மது கடத்தலில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
கடந்த இரண்டு நாளுக்கு முன்னர்தான் விருத்தாசலம் கலால் காவல்துறையின் 650 லிட்டர் எரி சாராயம் கடத்தப்பட்டதை பறிமுதல் செய்தனர். தொடர்ச்சியாக புதுச்சேரி மது பாட்டில்களும், எரி சாராயமும் கடத்தப்படுவதால் மத்திய கலால் புலனாய்வு போலீசாரும், மதுவிலக்கு அமலாக்க (கலால்) போலீசாரும் மது கடத்தவை தடுக்க தொடர் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.