Skip to main content

தொழிலதிபர் கழுத்தறுத்து கொலை! கத்திமுனையில் மனைவியிடம் 100 சவரன் கொள்ளை! 

Published on 25/04/2022 | Edited on 25/04/2022

 

100 pawn gold looted from business man

 

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா ஆவுடையார்பட்டினத்தைச் சேர்ந்தவர் முகமது நிஜாம் (வயது 52). இவர், ஆப்டிக்கல்ஸ் கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஆயிஷா பீவி. இவர்களுக்கு ராஜாமுகமது, சேக் அப்துல்காதர், பர்கானா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
 

மகள் பர்கானாவிற்கு திருமணமான நிலையில், மகன்கள் இருவரும் வெளியூரில் உள்ள ஆப்டிக்கல்ஸ் கடையை நிர்வகித்து வந்துள்ளனர். முகமது நிஜாம் மற்றும் அவரது மனைவி ஆயிஷா பீவி இருவரும் ஆவுடையார்பட்டினத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் வீட்டின் எதிர்புறம் உள்ள பள்ளிவாசவில் தொழுகையை முடித்துவிட்டு, வீட்டின் முன்பக்க வராண்டாவில் அமர்ந்து முகமது நிஜாம் செல்போன் பார்த்துக் கொண்டிருந்த போது, வீட்டின் சுற்றுச்சுவரை ஏறிக் குதித்து வந்த மர்ம நபர்கள் 3 பேர் முகமது நிஜாமின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் இரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து இறந்துள்ளார். 


அதனை தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்ற மர்ம நபர்கள் ஆயிஷா பீவியின் கை, கால்களை கட்டி போட்டுவிட்டு,  இரத்தக்கரையுடன் உள்ள கத்தியை காட்டி மிரட்டி பீரோ சாவியை கேட்டுள்ளனர். உயிர் பயத்திலிருந்த ஆயிஷா பீவி பீரோ சாவியை கொடுத்துள்ளார். சாவியை வாங்கிய மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 100 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். 


கை கால்கள் கட்டப்பட்டிருந்த ஆயிஷா பீவி மெல்ல நகர்ந்து சென்று  செல்போனை எடுத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து வந்து பார்த்த உறவினர்கள் முகமது நிஜாம் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து மணமேல்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு, வீட்டிற்குள் கட்டிக்கிடந்த ஆயிஷா பீவியை காப்பாற்றியுள்ளனர். 


சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்தீபன் சம்பவ இடங்களை ஆய்வு செய்து தடயங்களை சேகரிக்க உத்தரவிட்டார்.  டி.எஸ்.பிகள் மனோகரன், அருள்மொழி அரசு, சிவசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து சம்பவ இடத்தில் திருச்சி மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன், டி.ஐ.ஜி சரவணசுந்தர் ஆகியோர் ஆய்வு மேற்க்கொண்டனர். பள்ளிவாசலுக்கு எதிரே ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வீட்டிலிருந்த ஒருவரை கொலை செய்துவிட்டு 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தனிப்படை போலீசார் அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வரும் நிலையில், சந்தேக நபர்களை அழைத்து விசாரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும், கஞ்சா போன்ற மாற்று போதைக்கு அடிமையானவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால் அது போன்ற நபர்களையும் கண்காணித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்