சென்னையில் பணிபுரிந்த காவலர் சேலம் மேட்டூர் அருகே தனது அம்மாவிற்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த காவலர் தற்கொலை சம்பவம் சேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மேட்டூரின், மேச்சேரி மல்லிகுந்தம் ஊஞ்சக்காடு கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் 22 வயதான அன்பு ராஜ். இவர் தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் 2வது பட்டாலியன் பிரிவில் பணியாற்றி வருகிறார். தற்போது சென்னை ஆவடியில் வேலை செய்த அன்புராஜ் ஆகஸ்ட் 31ம் தேதி தொடங்கி ஒரு மாதத்திற்கு மருத்துவ விடுப்பு கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, தனது ஊஞ்சக்காடு கிராமத்திற்கு பயணப்பட்டுள்ளார் அன்பு. கிராமத்திற்கு சென்று சில நாட்கள் ஓய்வெடுத்து வந்துள்ளார். செப்டம்பர் 14 தேதி விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயன்றுள்ளார். பின்னர், விஷம் அருந்திய நிலையில் கிடந்த அன்புராஜ் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
எனவே, இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீஸ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் அன்புராஜின் பெற்றோர், உறவினர்கள் உட்பட அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் அன்புராஜ் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி வைத்த கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
அந்தக் கடிதத்தில் அன்புராஜ், "நான் போகிறேன் அம்மா, இவ்வளவு நாள் வாழ்ந்துவந்தே உனக்காகதான் அம்மா. எனக்கு என்ன ஆனதென்று தெரியல. மேலும், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இந்த கடிதம் எப்படியும் உங்களுக்கு படிச்சுக் காட்டப்படும். நான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சென்றுவிடலாம் என நினைத்தேன். பின் அனைவரும் தவறாக பேச தொடங்கிடுவாங்க. நான் என் மனமறிந்து யாருக்கும் கெடுதல் செய்தது இல்லை. என் தலைக்குள் ஏதோ ஓடிட்டு இருக்கு. என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வெளியே எங்கும் செல்ல மாட்டேன் அம்மா. உங்க கூடவே தான் இருப்பேன். இதற்காகத்தான் வீட்டுக்கே வந்தேன். 'ஒருவன் நல்லவன் என்பதற்கு அவன் இறந்த பின் அவனுக்காக சிந்தும் கண்ணீர் துளிகளால் மட்டுமே கண்டறியப்படுகிறது'. என மிகவும் மனம் உருகி எழுதியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, அன்புராஜ் குடும்ப பிரச்சனை தொடர்பாக தற்கொலை செய்தாரா, பணிச்சுமை காரணமா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, அன்புராஜ் பணியாற்றி வந்த சென்னை ஆவடி சிறப்பு காவல் படை பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அன்புராஜ் தற்கொலை சம்பவம் சக போலீசாரிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.