வேலூர் மாநகரில் இருந்து ஓசூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அப்போது மாதனூர் பகுதியில் பேருந்தில் ஏறிய டிக்கெட் பரிசோதகர் உமாபதி, ஒவ்வொரு பயணிகளிடமும் அவர்களின் டிக்கெட்டை வாங்கி பரிசோதனை செய்துவந்தார். அப்போது பின்பக்க சீட்டில் அமர்ந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவரிடம் டிக்கெட் பரிசோதனை செய்துள்ளார். அப்போது, அவர் காலுக்குக் கீழ், சீட்டுக்கு அடியில் வைத்திருந்த பை பெரியதாக இருந்ததால் அதில் என்ன இருக்கிறது எனக்கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பயணி துணி என சொல்ல அதில் சந்தேகமடைந்த அவர், அந்த பையை திறந்துகாட்டச் சொல்லியுள்ளார்.
அதற்கு அந்த இளைஞர் பையைத் திறந்துகாட்ட மறுத்துள்ளார். இது நீண்ட வாக்குவாதமாகியுள்ளது. அப்போதும் அந்த இளைஞர் பையைச் சோதனை செய்ய அனுமதிக்க மறுத்ததால் ஆம்பூர் காவல் துறையினருக்கு டிக்கெட் பரிசோதகர் உமாபதி தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் விரைந்துவந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தை நிறுத்தி உள்ளே சென்று அந்த பையைப் பரிசோதனை செய்தனர். அப்போது, அதில் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். உடனடியாக அந்த பையிலிருந்த 10 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், அந்த இளைஞரைக் கைது செய்தனர்.
விசாரணையில், அந்த இளைஞர் வேலூர் பகுதியைச் சேர்ந்த பைரோஸ் என்பதும், வேலூரிலிருந்து கஞ்சாவை பெங்களூருக்கு விற்பனை செய்வதற்காகக் கொண்டு சென்றதும் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அவர் மீது கஞ்சா கடத்தியதாக வழக்குப் பதிவு செய்து வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர் காவல்துறையினர்.