தி.மு.க கடலூர் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் வடலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் எம்.ஆர்.கே.பி.கதிரவன், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி, கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.கி.சரவணன், வி.சி.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், தமிழக வேளாண்மைத் துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, "மாவட்ட தி.மு.கவில் புதிதாக பல நிர்வாகிகள் பொறுப்பேற்றுள்ளனர். அனைவரும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும். சரியாகப் பணியாற்றாவிட்டால் 6 மாதத்தில் நிச்சயம் மாற்றப்படுவார்கள். கட்சியில் எப்பொழுதும் உழைத்தவர்களுக்கு தகுந்த மரியாதை உண்டு. தொண்டர்களை மதித்து நடக்க வேண்டும். அவர்களை மதித்ததால் தான் இன்று நான் எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக இருக்கிறேன். இன்னும் ஒரு ஆண்டில் பாராளுமன்றத் தேர்தல் வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், கடலூர் 2 பாராளுமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்றார்.
கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி மரக்கன்றுகள் நட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஞானமுத்து, சக்திவேல், சுதா சம்பத், ஒன்றிய செயலாளர்கள் தங்க.ஆனந்தன், பொறியாளர் சிவக்குமார், திருமாவளவன், விஜயசுந்தரம், கடலூர் மாநகராட்சி செயலாளர் கே.எஸ்.ராஜா, வடலூர் நகர் மன்றத் தலைவர் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கே.பி.ஆர்.பாலமுருகன், ஜேம்ஸ் விஜயராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.