Skip to main content

நேற்று வந்த தீர்ப்பு; இன்று தேர்தல் ஆணையத்தை நாடும் இபிஎஸ்! 

Published on 24/02/2023 | Edited on 24/02/2023

 

Yesterday's verdict; EPS will appeal to the Election Commission today!

 

கடந்த வருடம், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து, ‘பொதுக்குழு செல்லாது’ என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. மேலும், ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய அறிவுறுத்தல் ஒன்றையும் கொடுத்திருந்தது. அதன்படி அதிமுக வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்து தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

இந்த தீர்ப்பினை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, சஞ்சய் குமார் அமர்வு வாசித்தது. அதில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவை அங்கீகரிக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், இன்று டெல்லி செல்ல உள்ளார். அதிமுக சார்பில் விடுக்கப்படும் இந்த கோரிக்கையில் பொதுக்குழுவையும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியையும் அங்கீகரிக்க வலியுறுத்தப்பட உள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றத்தின்  தீர்ப்பும் சமர்ப்பிக்கப்பட உள்ளது. 

 

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால், தேர்தல் ஆணையம் தன் முடிவை அறிவிக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், தீர்ப்பு வெளிவந்துவிட்ட நிலையில் தேர்தல் ஆணையமே, பொதுக்குழுவையும் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ்ஸையும் அங்கீகரிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி இடைத்தேர்தலையும் கருத்தில் கொண்டு இவ்விஷயத்தில் காலம் தாழ்த்தாமல் விரைந்து முடிக்க முயற்சிகள் எடுத்துவருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 


 

சார்ந்த செய்திகள்