கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பின்னணியில் சட்ட சிக்கல்கள் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. கர்நாடகத்தில் நடைபெற்று வந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் கூட்டணி அரசு கவிழ்வதற்கு, இந்தக் கட்சிகளில் இருந்த 15 எம்.எல்.ஏ.க்கள் கட்சித் தாவியது தான் காரணம். இதனால் 15 எம்.எல்.ஏ.க்களையும் இடைத்தேர்தலில் நிற்க வைத்து, அவர்களுக்கு பதவிகளைக் கொடுக்க தயாராக இருப்பதாக ஆசைவார்த்தை கூறி தான் பா.ஜ.க. தரப்பு, அவர்களைத் தங்கள் பக்கம் இழுத்தது. இப்போது ஒருவழியாக எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தாலும், கட்சி மாறிய அந்த 15 எம்.எல்.ஏ.க்களின் பதவியையும் பறித்து, அவர்கள் 4 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்கத் தடையையும் விதித்துவிட்டார் அப்போது இருந்த சபாநாயகர் ரமேஷ் குமார். இந்தப் பதவிப் பறிப்பால் ஷாக்கான எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு தீர்ப்பிற்கு காத்திருக்கிறார்கள்.
இதனால் கால தாமதம் ஏற்பட்டதை உணர்ந்து அப்செட் ஆன அந்த எம்.எல்.ஏ.க்கள், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம், உங்களை நம்பி தான் கட்சி மாறினோம். மாறியதால் எங்கள் எதிர்காலம் என்னவென்று தெரியாதபடி நாங்கள் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் கட்சி மாறிய தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறித்ததால், ஆளும்கட்சிக்கு எதிராக செயல்பட்ட அவர்களுக்குப் பெரிய இழப்பு என்று எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் ஆளும்கட்சியில் இருந்தோம். எங்களுக்குப் பதவிப் பறிப்பால் பெரும்பாதிப்பு ஏற்பட்டு விட்டது என்று புலம்பி வருவதாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து தான் எடியூரப்பா, அமித்ஷாவை சந்தித்து, சட்டத்துறை மூலம் அந்த 15 பேருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. வழக்கு தீர்ப்பு எதிர்பார்க்கப்படும் நிலையில், அமித்ஷாவும் ஒரு புன்னகையோடு எடியூரப்பாவை முதுகில் தட்டிக்கொடுத்து பாசிட்டிவ் சிக்னல் கொடுத்ததாக கூறுகின்றனர்.