நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், கரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து கரூர் தோரணம்பட்டியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க. கொடுத்த தொடர் அழுத்தத்தால்தான் மகளிர் உரிமைத்தொகையை தி.மு.க.அரசு வழங்குகிறது. வீட்டில் சுவர் விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் உரிமைத்தொகையை நிறுத்துவோம் என திமுக.வினர் மிரட்டி வருகின்றனர். திமுகவினர் மிரட்டினால் பெண்கள் யாரும் பயப்பட வேண்டாம். 1000 ரூபாய் உரிமைத்தொகையை யாராலும் நிறுத்த முடியாது; அதற்கு நான் பொறுப்பு. உரிமைத்தொகையை நிறுத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
ஒரே ஆட்சியில் இரண்டு முறை விவசாயிகளின் பயிர் கடனை ரத்து செய்த ஒரே கட்சி அதிமுகதான். முதல்வர் ஸ்டாலின் மட்டுமல்ல யாராலும் அதிமுகவை அழிக்க முடியாது. தமிழ்நாட்டு மக்களை பற்றி யோசிக்காமல் தன் குடும்பத்தினர் பதவிக்கு வரவேண்டும் என்று மட்டுமே மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.