Published on 02/08/2019 | Edited on 02/08/2019
வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை தொடர்ந்து திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக திமுக பொருளாளர் துரைமுகனின் மகன் கதிர் ஆனந்த் களமிறங்குகிறார். அதிமுக சார்பாக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பாக தீப லட்சுமியும் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக கட்சிகளிடையே வேலூர் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் அதிமுக கூட்டணிக்கு தேமுதிக சார்பாக பிரேமலதா பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் நேற்று பிரச்சாரத்தின் போது, மக்களிடையே பாஜகவை தங்களுக்கு பிடிக்காது என்று கூறிவிட்டு, மத்திய அமைச்சர்களை சந்தித்து மக்கள் பிரச்சனைகளுக்கு கோரிக்கை வைக்காமல் தங்கள் சொந்த நலனுக்காக திமுக எம்.பி.க்கள் சந்தித்து வருவதாக பிரேமலதா பேசினார். மேலும் வேலூர் தொகுதிக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறினார். அதேபோல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்காக இலவச அரிசி வழங்கியவர் என்றும், அதேபோல் ஜெயலலிதாவும், விஜயகாந்தும் சினிமாவில் மட்டுமே நடிக்க தெரிந்தவர்கள் என்றும் மக்களுடன் நடிக்க தெரியாதவர்கள் என்றும் பிரேமலதா கூறினார்.