சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மற்றும் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை முன்னாள் மத்திய அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் இன்று (18.08.2024) சந்தித்து ஆலோசனை செய்தார். அந்த வகையில் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்கான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் கீரமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற ப.சிதம்பரத்திடம் கட்சி நிர்வாகிகள் பல்வேறு நிறைகுறைகளையும், கோரிக்கைகளையும் கூறினர்.
அப்போது அனைவரின் கோரிக்கைகளையும் கேட்டுக் குறிப்பெடுத்துக் கொண்டு கடைசியாக ப.சிதம்பரம் பேசும் போது, “கீரமங்கலத்தில் இயங்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தி மருத்துவ உபகரணங்கள் கூடுதலாக வைக்க வேண்டும் கூடுதல் கட்டட வசதிகள் வேண்டும் என்று கேட்டுள்ளீர்கள் விரைவில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல அரசர்குளம் கால்நடை மருந்தகம் அமைப்பது தொடர்பாகப் பரிசீலனை செய்வோம். மேலும், பல இடங்களிலும் பயணிகள் நிழற்குடை கேட்டீர்கள் அது எம்.பி நிதியில் கட்ட நடவடிக்கை எடுப்போம்.
ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள ஊராட்சி மன்ற பதவிகளுக்குக் காங்கிரஸ் கட்சி சார்பில் அதிகமான இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். அதற்கு இப்போதே பணிகளைத் தொடங்க வேண்டும். அதே போல மாவட்ட ஊராட்சிக்குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள் பதவிக்குக் கூட்டணிக் கட்சிகளிடம் கூடுதல் இடம் கேட்டுப் பெறுவோம். காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். இளைஞர்களை அதிக அளவு சேர்க்க வேண்டும். ஆனால் இளைஞர்கள் சேர்க்கை இல்லை. ஆகவே இந்த முறை அதிகமான இளைஞர்களைச் சேர்க்க வேண்டும். கட்சியை வளர்க்க வேண்டும் அதற்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. விரைவில் கிராமம் கிராமமாக வருவார். கொடி ஏற்றுவார் அதற்கு நிர்வாகிகள் தயாராக வேண்டும்” என்று பேசினார்.